செக் வைத்த எலான் மஸ்க்.. தடாலடி அறிவிப்பால் அலறும் உலகம்

x

டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் பயனர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான டிவிட்டரின் உரிமையாளரான பின்னர், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு டிவிட்டர் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார்.

அந்த வகையில், தற்போது மேலும் புதிதாக ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் , சரிபார்க்கப்பட்ட கணக்குகள் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். சரிபார்க்கப்படாத கணக்குகளை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளையும் மற்றும் புதிய சரிபார்க்கப்படாத கணக்குகளை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளையும் படிக்க முடியும் என எலான் மஸ்க் அறிவித்து உள்ளார்.

இதன் மூலம், டிவிட்டரில் இருந்து அதிக அளவிலான பயனர் பதிவுகள் போன்ற பல விவரங்கள் சேகரிக்கப்படுவது தடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை பதிவுகளை படிக்கலாம்? என்ற விவரங்களை எலான் மஸ்க் அறிவித்து உள்ளது தற்காலிகமான நடைமுறை மட்டுமே என்று டிவிட்டர் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில், சரிபார்க்கப்பட்ட கணக்குகள் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும் எனவும், சரிபார்க்கப்படாத கணக்குகளை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளையும் மற்றும் புதிதாக டிவிட்டர் கணக்கு தொடங்கி, அவை இன்னும் சரிபார்க்கப்படாமல் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளையும் படிக்க முடியும் என எலான் மஸ்க் அறிவித்து உள்ளார்.

முன்னதாக எலான் மஸ்க் வெளியிட்டிருந்த மற்றொரு அறிவிப்பில், சமூக வலைதளமான டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்களால் மட்டுமே இனிமேல், டிவிட்டர் பதிவுகளை படிக்க இயலும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலத்தில் அசுர வேகமெடுத்துள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்காக சில நிறுவனங்கள் டிவிட்டரில் இருந்து அதிக தரவுகளை பயன்படுத்துவதால் டிவிட்டரை பயன்படுத்தும் பயனர்கள் அசவுகரியத்தை சந்திக்க வேண்டியிருப்பதாக தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார் எலான் மஸ்க். இந்த நிலையில், அவற்றை தடுக்கும் முனைப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய கையோடு, தனது தடாலடியான மாற்றங்களால் அதிரடி காட்டி வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் எலான் மஸ்க். டிவிட்டரில் ப்ளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் டிவிட்டர் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்