அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் - பொய் சொல்கிறாரா ஆளுநர் ரவி..? ராஜ்பவனில் நடப்பது என்ன..?

x

ஒருபுறம் திமுக மீது நடவடிக்கை எடுக்கும்படி செயல்பட்டு வரும் ஆளுநர் ரவி மறுபுறம் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தடையாக நிற்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு அனுமதிக்குமாறு ஆளுநர் ரவிக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில்,

ஆளுநர் மாளிகை சார்பில், இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

அதாவது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தொடர்பான வழக்கில் சட்டபூர்வ நகல் கிடைக்கவில்லை என்றும்...முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்குகள் குறித்து தமிழக அரசிடமிருந்து எந்த கடிதமும் வரவில்லை என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை முற்றிலுமாக மறுத்துள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்த வழக்குகள் தொடர்பான கோப்புகளைப் பெற்றுக் கொண்டு, ஒப்புதலும் அளித்துவிட்டு, தற்போது முன்னாள் அதிமுக அமைச்சர்களை காப்பாற்ற கோப்புகளை வரவில்லை என ஆளுநர் ரவி பொய் கூறுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி தொடர்பான கோப்புகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், கோப்புகளை பெற்றுக் கொண்டற்கான ஒப்புதல் கையெழுத்தும் ஆளுநர் போட்டுள்ளார்.

அதே போல் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பான கோப்புகள் கடந்த மே மாதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த கோப்புகளை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கையெழுத்தையும் போட்டு விட்டு,

தற்போது ஆளுநர் ரவி இரட்டை வேடம் போடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், செவிடன் காதில் சங்கு ஊதியது போல்... மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

இந்நிலையில், குட்கா ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் ரமணா மீதான விசாரணை தொடங்குவதற்கு அனுமதி அளிக்குமாறு சிபிஐ அமைப்பு மாநில அரசுக்கு அளித்துள்ள கடிதம் பற்றிய விவரத்தையும் எடுத்துக்கூறி ஆளுநருக்கு மீண்டும் கடிதம் எழுதி இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மற்றும் மேற்குவங்கம் மாநிலங்களில் ஆளுநருக்கு எதிராக மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில், ஆளுநர் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி,

தமிழக முதல்வர் ஸ்டாலினின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று ஆளுநரை எச்சரித்திருப்பது இந்த விவகாரத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்