முடிவில் பிடிவாதமாக இருக்கும் மத்திய அரசு...டாக்டர் படிப்பவர்களுக்கு "NEXT" தடைக்கல்...நீட்-ஐ விட கடினம்.. எட்டாக்கனியாகிறதா MBBS?

x

2019ம் ஆண்டு எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு நவம்பர் மாதம் நடத்தவிருக்கும் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

நீட் தேர்வு போராட்டங்கள், சர்ச்சைகளே ஓயாத நிலையில், நெக்ஸ்ட் தேர்வு கிளம்பியுள்ளது. National Exit Exam என்ற நெக்ஸ்ட் தேர்வை நடப்பாண்டு முதல் அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதனால், 2019ம் ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் வரும் நவம்பர் இத்தேர்வை எதிர்கொள்கின்றனர்.

தேசிய மருத்துவ ஆணையத்தின்படி, நெக்ஸ்ட் தேர்வு என்பது ஓர் தகுதி தேர்வு. நீட் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தால் மருத்துவ படிப்புகளில் சேர தகுதி பெறுவதை போல, மருத்துவ படிப்புகளை பயின்ற மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவராகவும், முதுகலை படிப்புகளை மேற்கொள்ளவும் முடியும்.

கடந்த பல மாதங்களாக நெக்ஸ்ட் தேர்வை நடைமுறைப்படுத்தவுள்ளதாக மத்திய அரசு அறிவித்து வந்தது. ஆனால் நெக்ஸ்ட் தேர்வால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் என தமிழக அரசு உட்பட பல மாநில அரசுகள் தேர்வை எதிர்த்தன.

இருப்பினும் முடிவில் உறுதியாக இருந்த மத்திய அரசு, தேர்வை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

நெக்ஸ்ட் நிலை 1, நெக்ஸ்ட் நிலை 2 என இரண்டு கட்டங்களாக இந்த தேர்வு நடைபெறுகிறது. அதன்படி, ஐந்தரை ஆண்டுகள் கொண்ட எம்.பி.பி.எஸ்., படிப்பில், முதல் நான்கரை ஆண்டுகள் முடித்தபின், நெக்ஸ்ட் நிலை 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதில் இடம்பெறும் ஆறு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் தான், ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்ற முடியும்.

இதன் பின், ஓராண்டு பயிற்சி மருத்துவர் நிலையை முடித்த பிறகு, இரண்டாம் கட்ட நெக்ஸ்ட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் . இதிலும் தேர்ச்சி பெற்ற பிறகு அவர்கள் முதுகலை பட்டப் மருத்துவ படிப்பிற்கு செல்ல தகுதி பெறுவார்கள்.

இது போன்ற தேர்வால், படிப்பு சுமை அதிகரித்து மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்றும், அதனை தவிர்க்க இந்த தேர்வை கைவிட வேண்டும் என்றும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தினர் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

19 பாடங்களையும் படிக்க வேண்டிய சூழல் ஏற்படும்

மருத்துவ பல்கலைக்கழகம், மாணவர்களுக்கு எதிரானது

மாணவர்களுக்கு மனச்சுமையை ஏற்படுத்தும்

மருத்துவ நடைமுறைகளை கற்க இயலாத நிலை ஏற்படும்

ஏற்கனவே பல பாடப்பிரிவுகள் கொண்டு அழுத்தத்துடன் படிப்பை மேற்கொள்ளும் மருத்துவ மாணவர்களுக்கு அடுத்தடுத்து புதிய தேர்வுகளை மத்திய அரசு அறிவித்திருப்பது மாணவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெக்ஸ்ட் தேர்வை முதல்முறை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு வரும் 28ம் தேதி மாதிரி தேர்வு நடத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

-


Next Story

மேலும் செய்திகள்