2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கமிஷன்... ஆசை காட்டி 30 லட்சத்தை சுருட்டிய கும்பல்...

x

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கமிஷன்... ஆசை காட்டி 30 லட்சத்தை சுருட்டிய கும்பல்...

2000 ரூபாயை மாற்ற 10% கமிஷன்... ட்ரெண்டிங்காக யோசித்து நூதன மோசடி...

ஊரே ரெண்டாயிரம் ரூபா நோட்ட மாத்த ஓடிகிட்டு இருக்கு. இந்த சந்தர்பத்தை தங்களுக்கு சாதகமா பயன்படுத்திகிட்ட ஒரு கும்பல் 30 லட்சத்தை ஆட்டைய போட்டிருக்காங்க... 2000 ரூபா நோட்ட மாத்த போறதுக்கு முன்னாடி இந்த கதைய கொஞ்சம் பாத்துட்டு போங்க.


கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று இரவில் இந்தியாவில் பிறந்தது 2000 ரூபாய் என்ற இளஞ்சிவப்பு குழந்தை.

ஒட்டு மொத்த நாடும் அந்த காகித குழந்தையை கண்ணால் பார்த்துவிட வேண்டுமென்று இரவு பகலாகக் காத்துக் கிடந்ததை வரலாற்றில் யாராலும் மறக்க முடியாது.

இப்படி பிறக்கும் போதே லிமிடெட் வெர்ஷனாக வந்த 2000 ரூபாய் நோட்டு, அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த சில மாதங்களிலேயே புழக்கத்திலிருந்து தலைமறைவானது.

இந்த நிலையில் தான் செப்டம்பர் மாதத்தோடு 2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்ப பெறுவதாக ரிசர்வங்கி அறிவித்திருக்கிறது.

வீட்டில் இத்தனை நாட்களாகப் பெட்டியில் உறங்கி கொண்டிருந்த இந்த இளஞ்சிவப்புக் குழந்தை தற்போது அதிகமாகா வெளியில் தலைகாட்டத் தொடங்கி இருக்கிறது.

மளிகைக் கடைகளில் தொடங்கி, பெட்ரோல் பங், நகைக்கடை என பல இடங்களிளும் மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை போட்டி போட்டு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


இப்படி தங்களிடம் இருக்கும் ஒன்றிரண்டு 2000 ரூபாய் நோட்டுகளை நைசாக தள்ளிவிட்டுவிட்டு, 500 ரூபாயாக, மக்கள் மாற்றிக் கொண்டிருக்கும் வேலையில் தான், இங்கொரு ஏமாற்று கும்பல், இல்லாத 2000 ரூபாய் நோட்டை வைத்து 30 லட்ச ரூபாயைச் சுருட்டி இருக்கிறது.

ஜெயராமன், சந்திரசேகர், சிவராமன் இந்த மூவர் கூட்டணி தான் அந்த மோசடியை அரங்கேற்றிய பலே கில்லாடிகள்

ஜெயராமன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூரை சேர்ந்தவர். கொங்கு நாடு ஜனநாயக கழகத்தின் மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்திருக்கிறார்.

இவரது நண்பர்கள் தான் சந்திரசேகரும், சிவராமனும். ஜெயராமன் தன்னிடம் 30 லட்சம் ரூபாய்க்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாகவும், அதை வாங்கிக் கொண்டு 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால், 10% கமிஷன் தருவதாக தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி இருக்கிறார்.

ஜெயராமனின் இந்த செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டை அவரது நெருங்கிய நண்பர்களே நம்பாத போது, கமிஷனுக்கு ஆசைப்பட்டு கழுத்தை நீட்டியிருக்கிறது ஒரு ஆடு. அவரின் பெயர் சபரிநாதன். சபரிநாதன் இதே பகுதியில் பைனாஸ் தொழில் செய்து வந்திருக்கிறார்.

ஜெயராமனால் தனக்கு ஜாக்பார்ட் அடிக்கப் போகிறது என மகிழ்ச்சியில் துள்ளிய சபரிநாதன் டீலுக்கு ஓக்கே சொல்லி இருக்கிறார்.

சம்பவம் நடந்த அன்று வட்டித்தொழிலில் வந்த மொத்த பணத்தையும் மூட்டை கட்டிக் கொண்டு, சந்திரசேகரின் வீட்டுக்கு சென்றிருக்கிறார் சபரிநாதன்.

அப்போது அங்குத் தயாராக இருந்த ஜெயராமன் அன்ட் கோவிடம் 30 லட்சம் ரூபாய் இருந்த பண பையை ஒப்படைத்திருக்கிறார் சபரிநாதன்.


பணத்தை வாங்கி கொண்ட கும்பல், வீட்டுக்குள் சென்று 2000 ரூபாய் நோட்டுகளை எடுத்து வருவதாக கூறி விட்டு பின் வாசலில் தயாராக இருந்த காரில் தப்பித்துச் சென்றிருக்கிறார்கள்.

வெகு நேரமாகியும் வீட்டுக்குள் இருந்து யாரும் வெளியே வராததால், சந்தேகமடைந்த சபரிநாதன் உள்ளே எட்டிப்பார்த்திருக்கிறார். அப்போது தான் அந்த கும்பல் அவருக்கு விபூதி அடித்திருப்பது புரிந்திருக்கிறது. உடனே காவல் நிலையத்திற்குச் சென்று நடந்ததைக் கூறி இருக்கிறார் சபரிநாதன்.

போலீசார், அந்த கும்பல் தப்பி சென்ற பாதையைக் கண்காணித்து, மதுரைக்கு அருகில் காரோடு மடக்கிப்பிடித்து கைது செய்திருக்கிறார்கள்.

அவர்களிடம் இருந்து 17 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் மீதி பணம் பற்றிய முழுமையான தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயராமன், சந்திரசேகர் மற்றும் சிவராமன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்