எதிர்பாரா ட்விஸ்ட்.. ஈபிஎஸ் வைத்த செக்மேட்.. பயந்துவிட்டாரா ஓபிஎஸ்? - புகழேந்தி சொன்ன தகவல்
- அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு ஓபிஎஸ் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு குழப்பங்கள் சர்ச்சைகள் நீடித்து வருகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ளதால், பொதுக்குழு தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதனை தேர்தல் ஆணையம் ஏற்றதால், புலிகேசி நகர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவார் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.
- அதே நேரத்தில், வேட்புமனு தாக்கலின் இறுதிநாளன்று, ஓபிஎஸ் தரப்பில் இருந்து புலிகேசி நகர், காந்தி நகர் மற்றும் கோலார் தங்க வயல் ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். மனு பரிசீலனை நாளன்று எடப்பாடி தரப்பு வேட்பாளர் அன்பரசனின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டது.
- கோலார் தங்க வயல் தொகுதியில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் தாக்கல் செய்த வேட்பு மனுவிற்கான பி பார்ம்மை உரிய நேரத்தில் கொடுக்கவில்லை என்றாலும், உள்ளூர் வாக்காளர்களின் முன்மொழிவு இருந்ததால் சுயேட்சையாக போட்டியிட வாய்ப்பு வழங்கியது. அதே நேரத்தில், காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு கர்நாடக மாநில செயலாளர் குமார் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு அதிமுக பெயரிலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த தகவல் தேர்தல் ஆணையத்தின் இணையத்திலும் வெளியானது.
- இந்நிலையில், கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார், தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து, ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில், கட்சி பெயரை ஓபிஎஸ் வேட்பாளர் மோசடியாக பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
- இந்த புகாரை ஏற்ற கர்நாடக தேர்தல் ஆணையம், விளக்கம் கேட்டு குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிவித்தது. இந்த தகவல் வெளியான உடனேயே, செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுவை திரும்பப் பெறுவார்கள் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். யாருடைய புகாருக்கும் பயந்தோ அல்லது நெருக்கடியாலோ வேட்பு மனுக்களை திரும்ப பெறவில்லை என்ற அவர், கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால் இந்த முடிவை எடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
- ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ள சூழ்நிலையில், மாநாட்டிற்கு ஒரு நாள் முன்பு கர்நாடக அரசியலில் இருந்து திடீரென வேட்பாளர்களை திரும்ப பெற்றிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அதே நேரத்தில், தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னர், தெரிந்தே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தால், அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யவும் வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்தத்தில் தேர்தல் என வரும்போது ஈபிஎஸ் தரப்பை காட்டிலும், ஓபிஎஸ் தரப்புக்கு பல்வேறு சிக்கல்களை சந்திப்பது வாடிக்கையாகி வருகிறது. ஆனால், திருச்சியில் நடைபெற உள்ள பிரம்மாண்ட மாநாடு, ஓபிஎஸ்ஸின் பலம் மற்றும் அரசியல் பயணம் என்ன என்பதற்கான இறுதி வடிவத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
Next Story