ஈரான் மீதான போர் நீடித்து வரும் சூழலில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் ஆலோசனை நடத்த உள்ளனர். சவூதி அரேபியாவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த அவசரக் கூட்டத்தில் எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். போரை முடிவுக்குக் கொண்டு வரவும், பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நிலைநாட்டவும் தேவையான கூட்டு நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.