தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமைத்
தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தீர்ப்பாயம் அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான
குழு, ஆலை செயல்பட விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கலாம் என அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து,
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவில் ஆலையைத் திறக்கலாம் என உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாத்திமா பாபு என்பவர் தொடர்ந்த வழக்கில், தேசிய பசுமை
தீர்ப்பாயத்தின் உத்தரவை ஜனவரி 21ஆம் தேதி வரை செயல்படுத்த தடை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ஜனவரி 21ஆம் தேதி வரை செயல்படுத்த தேவையில்லை என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.