கன்னியாகுமரி அருகே பட்டப்பகலில் சினிமா பாணியில் இளைஞரை ரவுடி ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்கிற அக்கிரன். இவர் கடந்த சனிக்கிழமை அதே பகுதியை சேர்ந்த சுதன் என்ற இளைஞர் கடைக்கு சென்ற போது அவரை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரிடமிருந்து சுதனை மீட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ரவி, மீண்டும் அவரை விரட்டிச் சென்று தான் வைத்திருந்த உளியால் தாக்கியுள்ளார். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. விசாரணையில் ரவுடியான ரவி கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதியில் பலரையும் தாக்கியதும் தெரியவந்தது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் தன்னை கைது செய்ய வருவதை அறிந்து அவர் மீது மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் தொடர்ச்சியாக மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ரவியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.