கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய வீடியோ காட்சி இது.. சங்கத்தை விட சாப்பாடே முக்கியம் என இந்த சிறுவன் வெள்ளந்தியாக கூறிய காட்சிகளை வைத்து மீம்களும் ஏராளமாகவே வலம் வந்தன.
சமூக வலைத்தளங்களை கலக்கிய சிறுவனைப் பற்றி தேடிய போது அவர்கள் தூத்துக்குடி அருகே உள்ள குலசேகரப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. சிறுவனின் பெயர் பிரணவ். இவரது தந்தை பெயர் ப்ரடி. தாய் பெயர் நிம்மி. வேலை காரணமாக இவர்கள் நெல்லையில் தங்கியுள்ளனர். சிறுவன் பிரணவ் எல்கேஜி படித்து வருகிறார்.
விடுமுறைக்காக குலசேகரப்பட்டிணம் வந்த பிரணவ்விடம் அவரது உறவினர்கள் விளையாட்டாக வம்பிழுக்கப் போய் அந்த வீடியோ இப்போது வைரல் ஆகியிருக்கிறது. சிறுவனின் மாமா டிராவிட் இந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்ய இப்போது பிரணவ் பெரிய பிரபலம் ஆகிவிட்டார்...
எல்கேஜி படிக்கும் பிரணவ் சிறுவயது முதலே கதைகள் கேட்பதிலும், சொல்வதிலும் ஆர்வம் காட்டுவாராம். எப்போது கேட்டாலும் அசராமல் கதைகள் சொல்லி அசத்துவதும் கொள்ளை அழகு...
குழந்தைகளுக்கே உரிய சுட்டித்தனமும், துறுதுறுப்பும் தன் மகனுக்கே உரிய தனித்துவமாக இருப்பதாக கூறுகிறார் அவரது தந்தை ப்ரடி...
அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் உலாவரும் மழலைகளின் குறும்புகள் ரசிக்கத்தக்கவையாகவே இருக்கும். அதில் ப்ரணவ் பெயரும் இடம் பெற்றிருக்கிறது என்பதும் சிறப்பு தான்..