``நானும் தமிழ்வழி கல்வியில் படித்தவள்தான்’’ - அன்பிலுக்கு அமைச்சர் கீர்த்தனா கேள்வி சிவகாசி அருகே உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தான் நடத்திய ஆய்வு விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அது குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் கீர்த்தனாவின் ஆய்வுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அன்பில் மகேஷ், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர் இந்நிலையில், இதற்கு பதில் அளித்து பதிவிட்டுள்ள அமைச்சர் கீர்த்தனா, தான் ஆய்வு செய்த பள்ளியில் கழிப்பறை வசதி, உடற்கல்வி மற்றும் கணினி ஆசிரியர் இல்லை எனவும், அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது? எனவும் அன்பில் மகேஷுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள் என்பதால், அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே தன்னைப் பார்ப்பதாகவும், அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை தானே நேரடியாக அனுபவித்திருப்பதாகவும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். தன் மீது பொய்யான கதைகளைக் கட்டி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதை விடுத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.