திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அழகிய பூம்பாறை மலைக்கிராமம். அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டிருந்தும், பள்ளி தொடங்கும் நேரத்திற்கும், வகுப்பு முடிந்து வீடு திரும்புவதற்கும் உரிய பேருந்துகள் இல்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த நேரத்திற்கு வரும் ஒரே பேருந்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கு சென்று திரும்ப மாணவர்கள் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து காட்டெருமைகள் சுற்றித்திரியும் ஆபத்தான வனப்பகுதி வழியாக சென்று வருகின்றனர். மழை காலங்களில் பெரும் அவதிக்குள்ளாகும் மாணவர்கள் பள்ளி சென்று வர உரிய பேருந்துகளை இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.