கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம் - சக பெண் ஐஏஎஸ் அதிகாரி ஆதரவுப் பதிவு கள்ளக்குறிச்சி தவெக MLA விவகாரத்தில், ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆதரவாக உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதால் இது குறித்துப் பேசுவதில் தவறில்லை எனக் குறிப்பிட்டுள்ள கவிதா ராமு, கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களில் பரவிய பிறகே தங்களில் பலருக்கும் தெரியவந்ததாகக் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்களாலும், அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போன்று சிலர் சித்தரித்ததாலும், பெண் ஆட்சியரும் அவரது கணவரும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கவிதா ராமு வேதனை தெரிவித்துள்ளார். மேலும், வேறு மாவட்டத்திற்கு மாறிச் செல்லுமாறு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியபோதும், கள்ளக்குறிச்சியிலேயே தொடர்ந்து பணியாற்றப் போவதாக அவர் துணிச்சலுடன் முடிவெடுத்திருப்பதை கவிதா ராமு பாராட்டியுள்ளார். சக அதிகாரிகளாகிய நாங்கள் ஏன் இந்த விவகாரத்தை முன்கூட்டியே கையில் எடுக்கவில்லை என்று தன்னிடம் பலர் குறுஞ்செய்திகள் அனுப்பிக் கேட்டதாக கூறிய கவிதா ராமு, இந்த விவகாரத்தை தாங்கள் நிச்சயமாகக் கையில் எடுக்க விரும்பியதாகவும், பாதிக்கப்பட்ட சக பெண் அதிகாரியின் சம்மதமும், விருப்பமும் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கருதியதாகவும், பெண் ஆட்சியரின் சுயமரியாதைக்கும், விருப்பத்திற்கும் முதலிடம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தக் கடினமான காலகட்டத்தைக் கடந்து பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி, மன அமைதியையும், மனவலிமையையும் பெற வேண்டும் என்று தான் மனதார விரும்புவதாக IAS கவிதா ராமு தெரிவித்துள்ளார்