தமிழ்நாட்டில் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்க உள்ள நிலையில் சில்லென்ற குளிர்ந்த காற்றுடன் கருமேகங்கள் சூழ்ந்து மே மாதம் தொடங்கியுள்ளது. நேற்று சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்ப நிலை பதிவான நிலையில், இரவு முதல் திருநெல்வேலி, தேனி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. குறிப்பாக பழனி போன்ற இடங்களில் ஆலங்கட்டி மழையும் பதிவானது. இந்நிலையில் காலை முதல் சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழல் நிலவியது. இருப்பினும், கருமேகங்கள் விலகி வெயில் அதிகரிக்கும் என்றும், இந்த ஆண்டு மே மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.