#gingeegirlmissingcase #gingeemissinggirlupdate
செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில் சிபிசிஐடி போலீஸார் 8-வது நாளாக தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தாய் பவானி தினமும் கண்ணீருடன் வழிபாடு செய்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.... விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 18 நாட்கள் கடந்துள்ள நிலையில், சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியை மீட்க சிபிசிஐடி போலீஸார் இரண்டு தனிப்படைகளாகப் பிரிந்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். முதல் குழுவினர் செல்போன் அழைப்புகள், டவர் லொகேஷன் உள்ளிட்ட தொழில்நுட்பத் தரவுகளை தீவிரமாக ஆய்வு செய்து வரும் நிலையில், மற்றொரு குழுவினர் சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் ஆய்வாளர் ரேவதி தலைமையிலான குழுவினர், சிறுமியின் தந்தை வடிவேலு, தாய் பவானி, பாட்டி சாந்தி மற்றும் சகோதரி விஜயலட்சுமி ஆகியோரிடம் தனித்தனியாகத் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவர் தனது வீட்டின் கதவை மூன்று முறை தட்டியதாக அருகில் வசிக்கும் மூதாட்டி மணிமேகலை அளித்துள்ள வாக்குமூலம் இவ்வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொருபுறம், சிறுமி காணாமல் போய் 18 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், சிறுமியின் தாய் பவானி தனது மகள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என தினந்தோறும் வீட்டின் அருகே உள்ள விநாயகர் கோவிலில் கற்பூரம் ஏற்றி கண்ணீருடன் வழிபாடு செய்து வருகிறார். தாயின் இந்த நெகிழ்ச்சியான வேண்டுதல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.