கேஸா...அப்டினா? இதுவரை கேஸையே பார்க்காத ஹோட்டல் எந்த கவலையும் இல்லாமல் ஹாயாக இருக்கும் ஓனர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நூற்றாண்டு பழமையான ஹோட்டல் ஒன்று இன்று வரை விறகு அடுப்பில் உணவு சமைத்து பாரம்பரிய சுவையை காக்கிறது. கேஸ் தட்டுப்பாடும் இந்த ஹோட்டலை பாதிக்கவில்லை. டெக்னாலஜி வேகமாக வளர்ந்தாலும், சில பாரம்பரியங்கள் மட்டும் காலத்தை தாண்டி வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு பாரம்பரியத்தை காக்கும் ஹோட்டல் தான் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் உள்ளது. பத்மநாபபுரம் அரண்மனை சாலையில் அமைந்துள்ள இந்த ஹோட்டல், நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. காலம் மாறினாலும், இங்கு மாறாத ஒன்று, விறகு அடுப்பில் சமைக்கும் உணவின் சுவை. இந்த ஹோட்டலை தொடங்கியவர் கருணாய நாயர். அன்றைய காலத்தில் விறகு அடுப்பில் டீ, தோசை, மற்றும் மதிய சாப்பாடு போன்றவற்றை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தார். விறகு அடுப்பில் சமைக்கும் உணவின் மணமும் சுவையும், தக்கலை சுற்றுவட்டார மக்களை மட்டுமல்ல, பத்மநாபபுரம் அரண்மனைக்கு வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்தது. கருணாய நாயர் காலமான பிறகும், அவரது மகன் வேலாயுதன் அந்த பாரம்பரியத்தை அப்படியே தொடர்ந்து வருகிறார். இந்த டெக்னாலஜி உலகத்தில், பல ஹோட்டல்கள் கேஸ் அடுப்புகளை பயன்படுத்தி வேகமாக உணவு தயாரிக்கும்போது, வேலாயுதன் மட்டும் தனது தந்தை பின்பற்றிய முறையை மாற்றாமல் வைத்திருக்கிறார். இன்றும் இந்த ஹோட்டலில் காலை டீ முதல் தோசை வரை.. மதிய உணவு வரை.. அனைத்தும் விறகு அடுப்பிலேயே சமைக்கப்படுகிறது.. இதனால் உணவின் இயற்கையான மணமும்.. சுவையும் மாறாமல் இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்..