"100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்"
நூறு நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தக்கோரி நாகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 300 க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தினக்கூலியை 250 ரூபாயிலிருந்து, 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பின்னர், விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.
"அகற்றப்பட்ட குடிசை வீடுகளுக்கு மாற்று இடம்"
கடலூர் மாவட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர், பாதிரிகுப்பத்தில், அகற்றப்பட்ட குடிசை வீடுகளுக்கு மாற்று இடம், சி.என்.பாளையம் கிராமத்துக்கு சுடுகாட்டு பாதை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 100 நாள் வேலையில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மனுவை மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாகிகள் அளித்தனர்.