சென்னை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்த 72 வயதான மூதாட்டி சரஸ்வதி 78 வயதான கணவருடன் வாழ்ந்து வந்தார். கணவர் அண்மையில் காலமானதால் தள்ளாத வயதில் தனியாக இருக்க வேண்டாம் என நினைத்த மூதாட்டி சரஸ்வதி, தனது 42 வயது மகனான எத்திராஜ் என்ற ரமேசுடன் தங்கினார்.தள்ளாத வயதில், பாதுகாப்பு தேடி வந்த தாயின் கழுத்தை மகன் கத்தியால் அறுத்துக் கொன்றதாக கூறப்படுகிறது.தாயை கொலை செய்த எத்திராஜ் தற்கொலை செய்யும் நோக்கில் தனது வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். ஆனால் கத்தி உள்ளே சிக்கிக்கொள்ள வலியால் துடிதுடித்த எத்திராஜ் அலறியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்ட எத்திராஜ் ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மூதாட்டியின் சரஸ்வதியின் உடல் கூராய்வுக்கு அனுப்பப்பட்டது. போலீசாரின் விசாரணையில் எத்திராஜ் மதுப்பிரியர் என்பதும் மனைவி பிரிந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு தனியாக இருந்ததும் தெரியவந்தது. காசில்லாத நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தாயும் வந்து சேர்ந்ததால் இருவரும் இறந்துவிடலாம் என கூறிவந்த எத்திராஜ் திடீரென தாயின் கழுத்தை அறுத்துக்கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகனுக்குள் இருந்த மது என்னும் கொடூரனுக்கு தாய் பலியாகி உள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.