திற்பரப்பு அருகே மருத்துவரை கட்டிப்போட்டு 12 சவரன் கொள்ளை கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவி அருகே, உடல்நிலை சரியில்லை என கூறி மருத்துவரை வரவழைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருமனையைச் சேர்ந்த மருத்துவர் விபின்குமாரை, உடல்நிலை பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறி மர்ம நபர்கள் அழைத்துள்ளனர். இதனை நம்பிச் சென்ற மருத்துவரை, ஹோட்டல் அறைக்குள் அடைத்து ஒன்பது பேர் கொண்ட கும்பல் கட்டிப்போட்டு தாக்கியுள்ளது. அவர் அணிந்திருந்த 12 சவரன் நகைகளைப் பறித்ததுடன், வங்கிக் கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம் 53 ஆயிரம் ரூபாயையும் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் அந்தக் கும்பல் தப்பியோடிய நிலையில், குலசேகரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அறையை வாடகைக்கு எடுத்தவர்களின் விவரங்களின் அடிப்படையில், கொள்ளையில் ஈடுபட்ட ஒன்பது பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்