கவிழ்ந்த லாரி.. பொருட்கள் திருடுபோகாமல் இருக்க முகத்தில் ரத்தத்துடன் ஓட்டுநர் செய்த செயல் - மனதை ரணமாக்கும் காட்சி #Dindigul #accident #thanthitv திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, ஜவுளி பாரம் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளான நிலையில், காயமடைந்த ஓட்டுநர் நான்கு மணி நேரமாக லாரியைக் காவல் காத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அந்த லாரி, விட்டல் நாயக்கன்பட்டி அருகே வந்தபோது திடீரென முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் திருவாரூரைச் சேர்ந்த ஓட்டுநர் வீராச்சாமிக்குத் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார், வீராச்சாமியை மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தினர். ஆனால், லாரி உரிமையாளர் வரும் வரை அங்கிருந்து நகர வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டதால், ஜவுளி மூட்டைகள் திருடு போகாமல் இருக்க, ரத்தக் காயங்களுடன் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஓட்டுநர் வீராச்சாமி லாரியிலேயே காத்திருந்தார். விபத்தில் சிக்கிய நிலையிலும் தனது கடமையுணர்வோடு அவர் காத்திருந்த காட்சி அங்கிருந்தோரைச் சோகத்தில் ஆழ்த்தியது.