அரசியல்

தமிழகத்தில் பாஜக-வின் பலம் என்ன?

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் பாஜகவின் பலம் என்னவாக இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

தந்தி டிவி

1967 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் குறைந்து, பிரதான மாநில கட்சிகளான திமுக அதிமுக ஆகியவையே மாறிமாறி ஆண்டுவருகின்றன. தேசிய அளவில் வலுவான, பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியும் கூட மாநில கட்சியின் துணையுடன் தான் சவாரி செய்துவருகிறது. தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக பார்க்கப்படும் பிரதான கட்சியான பாஜக, கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் தன்னுடைய ஆட்சியை பல மாநிலங்களில் விரிவுபடுத்தியுள்ளது. ஆனாலும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக காலூன்ற முடியாத நிலையே உள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக 1996 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதம் பெற்றதுடன், குமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றியும் பெற்றது. இந்த தொகுதியில் வெற்றிபெற்ற வேலாயுதன் என்பவர்தான், தமிழகத்தில் இருந்து சட்டசபைக்கு சென்ற முதல் பாஜக உறுப்பினர். அப்போதுதான் தமிழகத்தில் பாஜக-வின் இருப்பு தெரிய ஆரம்பித்தது.

அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. 30 தொகுதிகளில் வென்ற அக்கூட்டணியில் பாஜக 3 தொகுதிகளில் வென்றது. 6.9% வாக்குகளைப் பெற்றது. இந்த வெற்றியே மத்தியில் வாஜ்பாய் ஆட்சி அமைய அடித்தளமிட்டது. எனினும் ஜெயலலிதா ஆதரவை விளக்கிக் கொண்டதால் 1999ல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.

இந்தமுறையும், தமிழகத்தில் பாஜகவை மையமாகக் கொண்டுதான் கூட்டணி அமைந்தது. ஆனால், அதன் தமிழகத் தலைமையாக திமுக மாறியது. அத்தேர்தலில் 26 தொகுதிகளில் பாஜக கூட்டணி வென்றது. கோவை, நீலகிரி, திருச்சி, நாகர்கோவில் உள்ளிட்ட 4 தொகுதிகளில பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். 2001 சட்டசபை தேர்தலில் திமுக அணியில் இருந்த பாஜக காரைக்குடி, மயிலாடுதுறை, மயிலாப்பூர், தளி ஆகிய 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது.வாக்கு சதவீதம் 3.2.

ஆனால், 2004 தேர்தலில் தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரகாசிக்கவில்லை. அத்தேர்தலில் காங்கிரசை மையப்படுத்தி அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது. அதிமுக- உடன் இருந்ததால் பாஜக கூட்டணி 33 சதவிகித வாக்குகள் பெற்றது.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. 1 தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. 2.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக 1 தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. மொத்தமாக 5.5 சதவீத வாக்குகள் கிடைத்தன.

இதனிடையே, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 2.2 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்ற பாஜக, கடைசியாக நடைபெற்ற 2016 தேர்தலில் 2.8 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது புள்ளி 6 சதவீதம் அதிகமாகும். ஆனாலும், 1996 இல் முதல் முறையாக போட்டியிட்டபோது 1 தொகுதியில் வென்ற பாஜக, அதன்பின்னர், கடந்த 22 ஆண்டுகளில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்த வெற்றியையும் ருசிக்கவில்லை. ஒரு சில தொகுதிகள் என்பதே இன்றுவரை பாஜகவுக்கு கனவாகத்தான் இருக்கிறது.

மறுபக்கம் திமுக அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் வலுவான தலைமையால், பாஜக-வுக்கு, போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும், அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது. தற்போது ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாத சூழலில் தமிழகத்தில் பாஜக தடம்பதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தென்சென்னை தொகுதி நிர்வாகிகளுடனான, ஆலோசனைக் கூட்டத்தில் காணொலிக் காட்சி வாயிலாகப் பேசிய மோடி, திரிபுராவைப் போல் கடுமையாக உழைத்தால், தமிழகத்திலும் வெற்றிபெறலாம் என்று பேசியிருக்கிறார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்