என்.டி.ஆர்.எப். மையத்தில் புதிய பதவி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாக்பூரில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை பயிற்சி மையத்தில் மூத்த நிர்வாக தரத்தில் இயக்குனர் பதவி ஒன்றை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு, தடுப்பூசி போடும் பணிகள், யாஸ் புயல் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எப்.) அகாடமியில் மூத்த நிர்வாக தரத்தில் இயக்குனர் பதவி ஒன்றை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் விருப்பம் தெரிவித்தது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், என்.டி.ஆர்.எப். அகாடமியை அதற்கான நோக்கங்களுடன் வழி நடத்த முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாலத்தீவின் அத்து நகரில், புதிய இந்திய துணை தூதரகம் திறக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.