திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய பிரதிகளான சுவப்னா சுரேஷூடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள் கூட்டு ஆலோசனை மேற்கொள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்ததாக கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக கடத்தல் கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்து சிவசங்கரனிடம் சுங்க துறை மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தனித் தனியே விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக சிவசங்கரனை கொச்சி சுங்கத்துறை அலுவலகத்திற்கு வரவழைத்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 11 மணி நேரம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே, ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் ஆகியோர் விசாரணையின் போது அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலும், சிவசங்கரன் தொடர்பாக ஏற்கனவே கைப்பற்றப்பட்ட தடயங்கள் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் செவ்வாய் அன்று விசாரணைக்கு கொச்சி அலுவலகத்தில் ஆஜராக, சுங்கத்துறை அதிகாரிகள் சிவசங்கரனுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.