சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளை வழங்கி இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஐஜி பொன்.மாணிக்கவேல், சிலைகளை பாதுகாப்பாக வைக்க, பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டினார். அதற்கு அரசு தரப்பில், கோவில்கள் புனரமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் பாதுகாப்பு அறை கட்டுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கோவில்களில் சிலைகள் பாதுகாப்பு அறை அமைப்பது தொடர்பாக அறிக்கையை ஜூலை 11ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என இறுதிக்கெடு விதித்து நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். தவறினால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.
இதனைதொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளை அரசு தனக்கு தெரியாமலும், நீதிமன்றத்தில் அனுமதி பெறாமலும் பணியிட மாற்றம் செய்வதாகவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும் ஐஜி பொன்மாணிக்கவேல் குற்றம் சாட்டினார்.
இதைக் கேட்ட நீதிபதி, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்களை நீதிமன்ற அனுமதி இல்லாமல் பணியிடம் மாற்றம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது. தொடர்ந்து இதுபோல் செயல்பட்டால் டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.