போலீசார் முன் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை
குமாரபுதுக்குடியிருப்பை சேர்ந்த சக்திவேல் என்பவர் மது போதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தபோது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சக்திவேலை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த சக்திவேல் தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பூச்சி மருந்தை போலீசார் முன்பே எடுத்து குடித்துள்ளார். அதிர்ச்சியடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விவசாயி சக்திவேல் உறவினர்கள் சாலை மறியல்
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவசாயி சக்திவேல் உயிரிழந்தார். இதனையடுத்து விவசாயி சக்திவேலின் இறப்பிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் வள்ளியூர் - சித்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் கூடுதல் கண்காணிப்பாளர் உதயகுமார் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.