2008ம் ஆண்டு 100 கோடி ரூபாய் செலவில் மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த தொகையை திருப்பி தராமல் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பிரமிட் சாய்மிரா பட நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
கமல்ஹாசனுக்கு அளிக்கப்பட்ட 4 கோடி ரூபாயை, வட்டியுடன் சேர்த்து கொடுக்காமல் விஸ்வரூபம் 2 திரைப்படத்தை தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மர்மயோகி படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு அதற்கான வீடியோக்களும், போட்டோக்களும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்திடம் காண்பிக்கப்பட்டுவிட்டதாக கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் பதில் மனுதாக்கல் செய்ய கமல்ஹாசன் ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.