நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வெப்பம் மிகுந்த மண்ணில் திராட்சை சாகுபடி செய்து அசத்தும் பொறியியல் பட்டதாரி இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்.
கொத்து கொத்தாக தொங்கும் திராட்சைகள்... காண்போரை சுண்டி இழுக்கும் வகையில் கனிந்து விளைந்து நிற்கின்றன...
பொதுவாக விவசாயிகளின் கைவண்ணத்தில் திராட்சைகள் விளையும் நிலையில் இதற்கு ஒரு பொறியியல் பட்டதாரியே மூல காரணம் என்றால் நம்ப முடிகிறதா...
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே காணிமடம் பகுதியை சேர்ந்தவர் செலின். பொறியியல் பட்டதாரியான இவர், வெளிநாட்டில் உள்ள கப்பல் நிறுவனத்தில் எலக்ட்ரோ டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார். அப்போது திராட்சை பயிரிட ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பணியை ராஜினாமா செய்து விட்டு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள தெற்கு கள்ளிகுளத்தில் திராட்சை சாகுபடி பணிகளை தொடங்கினார்.
வெப்பம் மிகுந்த பகுதியில் பன்னீர் திராட்சையை வளர்ப்பதற்காக ரூட் ஸ்டாக் என்ற கொடியுடன் இணைத்து வளர்த்து பின்பு செடியை பந்தலிட்டு அதன் மீது படர விட்டு வளர்த்து வருகிறார். அதன் பலனாக தற்போது இரண்டு ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு 60 டன் திராட்சை கிடைப்பதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கிறது என கூறுகிறார் செலின்.
நெல்லை மாவட்டத்தில் யாருமே திராட்சை சாகுபடி செய்யாத நிலையில் செலின் திராட்சை சாகுபடி செய்து மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். இதற்காக நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு செலினை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்.