பாகிஸ்தானில் விதிமுறைகளை மீறி வீட்டில் வளர்க்கப்பட்ட 18 சிங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் , மறுபுறம் பல வீடுகளில் சட்டவிரோதமாக சிங்கங்கள் மற்றும் புலிகள் வளர்க்கப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது..
காட்டுக்கு ராஜாவான சிங்கங்களை தங்கள் வீடுகளில் வளர்ப்பதை ராஜ கௌரவமாக கருதும் பாகிஸ்தானீயர்கள்... சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளை தங்கள் வீடுகளில் வளர்ப்பதை பெரும் அந்தஸ்தாக பார்க்கிறார்கள்.
பாகிஸ்தானின் வீடுகளில் இத்தகைய விலங்குகளை வளர்ப்பது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டாலும், இவற்றை வளர்க்க விரும்புவோர் 50 ஆயிரம் ரூபாயை ஒருமுறை கட்டணமாக செலுத்தி பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்....
ஆனால் விதிமுறைகளை மீறி பதிவு செய்யாமல் பலரும் தங்களது பண்ணைகள் மற்றும் வீடுகளில் சிங்கம், புலி போன்ற மிருகங்களை வளர்த்து வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானின் லாகூரில் வீட்டில் ஒருவர் வளர்த்த சிங்கம் வீட்டை விட்டு தப்பி ஓடி தெருவில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேரை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியது.
பாகிஸ்தானில் மக்கள் அதிகம் வசிக்கும் மாகாணமாக அறியப்படும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வீடுகள், பண்ணைகளில் மட்டும் 584 சிங்கங்கள் மற்றும் புலிகள் வளர்க்கப்படுவதாக கூறப்படும் நிலையில், முதற்கட்டமாக 38 சிங்கம் மற்றும் புலிகள் இனப்பெருக்க பண்ணைகளில் நடத்தப்பட்ட சோதனையில் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, எட்டு பேரை கைது செய்த போலீசார், 18 சிங்கங்கள் , சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.