மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.08.2025) Thanthi TV

Update: 2025-08-01 08:17 GMT

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஓபிஎஸ் தொடர்பான கேள்விக்கு கடும் கோபமடைந்தார்..அதனை தற்போது பார்க்கலாம்...."தேவை இல்லாம பேச வேணாம்.. வார்த்தைய அளந்து பேசுங்க.." - ஓபிஎஸ் குறித்து கேள்வி கேட்டதும் கடுப்பான செல்லூர் ராஜு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஸ்ரீநாகம்மாள் கோவில் ஆடி திருவிழாவில் பூங்குழி இறங்கிய கருப்பசாமி, அரிவாள் மீது ஏறி அருள்வாக்கு கூறினார். சிங்கம்புணரி அருகே உள்ள ஓசாரிபட்டியில் கிராம தெய்வமாக அருள்பாலிக்கும் ஸ்ரீநாகம்மாள் கோவில் 11-ம் ஆண்டு பால்குடம் ஆடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக பாதயாத்திரையாக புறப்பட்டு, ஜோதி விநாயகர் ஆலயம் முன்பு ஆண் பக்தர்கள் 16 அடி அலகு குத்தியும், பெண் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர். மேலும் கருப்பசாமி அருள்வந்து, இரண்டு முறை பூங்குழி இறங்கி, அரிவாள் மீது ஏறி நின்று மீசையை முறுக்கி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் ஜூலை மாதம் உண்டியல் வருமானம் 3.84 கோடி ரூபாய் வந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அப்படி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய ஜூலை மாதம் உண்டியல் வருமானம் 3 கோடியே 84 லட்சம் ரூபாய் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சாய்பாபா கோவிலில் 500வது வார அன்னதான திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சீரடியில் இருந்து சாய்பாபா பயன்படுத்திய காலனி, பாதுகை மற்றும் உடை விமானத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது. முன்னதாக ஆத்மாதா சாமி கோவிலில் இருந்து நான்கு முக்கிய விதிகளிலும் பக்தர்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து வந்து சாய்பாபா கோவிலில் வைத்தனர். தென் தமிழகத்திற்கு முதல் முறையாக கொண்டு வரப்பட்ட, சாய்பாபாவின் காலனி மற்றும் உடைகளை பக்தர்கள் தொட்டு வணங்கிச் செல்கின்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிவ ஆதினமடம் ஆசான் பாலகும்பமுனி தலைமையில் ஜப்பானைச் சேர்ந்த இந்து பக்தர்கள் 20 பேர், ஆகஸ்ட் 20ஆம் தேதிவரை தமிழகம் முழுவதும் திருக்கோவிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி தாயாரை வழிபட்டு பின்னர் உலக மக்கள் நன்மைக்காக 108 போமா சாமான்களை யாக குண்டத்திலிட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு மேற்கொண்டனர். 60 நாட்களில் 120 திருக்கோவிலுக்கு சென்று யாகம் மற்றும் அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்லடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண்ணை கைது செய்த போலீஸார், 12 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை குறித்த தகவலின் பேரில், பல்லடம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில், சோதனை மேற்கொண்டனர். அப்போது வேலுச்சாமி காம்பவுண்டில் வசித்து வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த உஷா என்பவர் வீட்டில் 2 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், அவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்றதாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மல்லன்குழி அருகே அதிகாலை வனப் பகுதியில் இருந்து வெளியேறிய‌ இரு காட்டு யானைகள், விவசாய தோட்டத்தில் நடமாடுவதை கண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். பொது மக்களின் சத்தம் கேட்டு, காட்டு யானைகள் வனப்பகுதியை நோக்கி சென்றபோது பொதுமக்கள் யானைகளை பார்த்து பொறுமையாக போகுமாறும், குழிக்குள் இறங்க வேண்டாம் என அன்புடன் அறிவுறுத்தினர். இரண்டு யானைகளும் மெதுவாக வனப் பகுதிக்குள் சென்றன. யானைகள் விளைநிலங்களில் நடமாடிய காட்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். பகல் நேரங்களில் ஊருக்குள் நுழையும் யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விளை நிலத்தில் யானைகள் உலா - அன்புடன் அறிவுரை சொல்லி பாசத்தோடு துரத்திய மக்கள்

அடுத்த 23 நாட்களுக்கு, கரூர் வழியாக செல்லும்,கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர் ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளங்கள் பராமரிப்பு பணி காரணமாக, இன்று முதல் 23- ம் தேதி வரை 23 நாட்களுக்கு, கோவை - நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் பயணிகளின் சிரமத்தை தவிர்ப்பதற்காக பராமரிப்பு பணி நடைபெற உள்ள இந்த 23 நாட்களில், ஞாயிறு, புதன் மற்றும் 15ஆம் தேதி சுதந்திர தினம் தவிர மற்ற நாட்களில் திண்டுக்கல் முதல் நாகர்கோவில் வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு மொத்தமாக 617 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 354 பேர் நிரந்த ஊழியர்களாகவும், 263 பேர் ஒப்பந்த அடிப்படையிலும் பணிபுரிகின்றனர். பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் அரசு இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த 28-ம் தேதி முதல்‌ 600 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்கள் போராட்டம் காரணமாக 5-வது நாளாக இன்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முத்தாண்டிக்குப்பம் கிராமத்தில் பேருந்து பயணிகளுக்காக ரூ.22 லட்சத்தில் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. நிழற்குடைக்கு முத்தாண்டிக்குப்பம் என பெயர் வைக்காமல் பக்கத்து ஊரான பெரியான்குப்பம் என்று பெயர் வைக்கப்பட்டதால் கிராம மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து, முத்தாண்டிக்குப்பம் கிராம மக்கள் காவல் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரம் பெரியான்குப்பம் கிராம மக்களும் பெயரை நீக்க கூடாது என சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு கிராம மக்களிடமும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் போல் வரும் சிலர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, தப்பி சென்று விடுகின்றனர். இதனால் மீனம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தேனீர் கடைகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்ற கூடிய வட மாநில தொழிலாளர்கள், நேபாள தொழிலாளர்கள் குறித்த விவரங்களை மீனம்பாக்கம் போலீசார் கேட்டறிந்தனர். மேலும் தொழிலாளர்கள் தங்கி இருந்த அறைகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பல்லடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண்ணை கைது செய்த போலீஸார், 12 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை குறித்த தகவலின் பேரில், பல்லடம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில், சோதனை மேற்கொண்டனர். அப்போது வேலுச்சாமி காம்பவுண்டில் வசித்து வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த உஷா என்பவர் வீட்டில் 2 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், அவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்றதாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மீன் வியாபாரி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமுதி அருகே உடையார் கூட்டம் கிராமத்தில்,

வசித்து வந்த ஜவருல்லா, தனது மனைவி மகளுடன் கடந்த 10 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றார். இவரது மகள் அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஜவருல்லாவை ஒரு கும்பல் வந்து வெட்டி விட்டு தப்பிச்சென்றது. இதில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ஜவருல்லா உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இது குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்