ஒரே நாளில் 50 ஆயிரம் பெண்கள் மகளிர் உரிமை தொகைக்கு எழுதி போட காரணம் என்ன?
உங்களுடன் ஸ்டாலின் முகாம் - முதல் நாளிலேயே 50,000 மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கிய முதல் நாளிலேயே, ஒரு லட்சத்து 25 ஆயிரம் மனுக்கள் குவிந்துள்ளன. அவற்றில், 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின், சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாம்களில், நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கப்படுகிறது. பிற இனங்களில், அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதியுள்ள விடுபட்ட பெண்கள், இந்த முகாம்களில் விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில், முதல் நாளிலேயே தமிழ்நாடு முழுவதும் மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மகளிர் உரிமைத்தொகை கோரி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.