மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் ரெய்டு நடத்தியதும், சொந்தக் கட்சியினர் உள்பட யாருக்கும் தெரியாமல் அவசரமாக டெல்லிக்குப் பறந்து சென்றவர் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லிக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக செல்கிறேன் என்ற செய்தி வெளியானதுமே, அரசியல் எதிரிகளின் அடிவயிற்றில் புளி கரைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டு, வழக்கம்போல் வன்மத்தை வெளிப்படுத்தத் தொடங்கியதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்த கூட்டம் என்பதாலும், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகக் கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிலைப்பெற்றிருப்பதாலும், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதியாக, மாநில முதல்வராக தானும் அதில் பங்கேற்கத் தீர்மானித்ததாக குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் ரெய்டு நடத்தியதும், சொந்தக் கட்சியினர் உள்பட யாருக்கும் தெரியாமல் அவசரமாக டெல்லிக்குப் பறந்து சென்று, உள்துறை அமைச்சர் அமித்ஷாவைப் பார்த்து, தன்னையும், கட்சியையும் ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்துக் கூட்டணி அமைத்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும் முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.