காரில் சென்ற திமுக பெண் நிர்வாகி மகனை மறித்து அரிவாள் வெட்டு.. ஒன்று திரண்ட உறவினர்கள்
புதுக்கோட்டையில் காரில் சென்ற திமுக பெண் நிர்வாகியின் மகனை, 4 பேர் பைக்கில் வந்து அரிவாளால் வெட்ட முயன்றதை கண்டித்து, அவரது உறவினர்கள் காவல்நிலையத்தின் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த வளர்மதி என்பவர் தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் செயலாளராக உள்ளார். இவரது மகனான வெங்கட் என்பவரை கீரமங்கலம் சன்னதி அருகே வழிமறித்த முகமூடி அணிந்த கும்பலினர், அரிவாளால் வெட்ட முயன்றதில், கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டு, அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், அவரது உறவினர்கள் காவல்நிலையத்தின் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்பு அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு அவர்கள் கலைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.