முருகன் மாநாட்டில் பெரியார்,அண்ணா மீதான விமர்சனம் - அமித்ஷா கருத்து
தமிழ்நாட்டுக்கு மோடியின் அரசு எந்த அநியாயமும் செய்யாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தினத்தந்தி நாளிதழுக்கு அமித்ஷா அளித்த சிறப்பு பேட்டியில், மக்களின் கவனத்தை திசைதிருப்பவும், தங்களது ஊழலையும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மோசம் அடைந்துள்ளதை மறைக்கவுமே தொகுதி மறுவரையறை விவகாரத்தை தி.மு.க கையில் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
ஐ.நா. மன்றத்தில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தமிழ் வரியை குறிப்பிடும் அளவுக்கு பிரதமர் மோடி தமிழின் பெருமையை உலகறியச் செய்ததாக அமித்ஷா குறிப்பிட்டார்.
தி.மு.க இந்து விரோத கட்சி என்று ஒரு அரசியல் விவகாரமாக பா.ஜ.க முன்னெடுத்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, தமிழ்நாட்டு மக்கள் அவர்களது தவறுகளுக்கு உரியபடி தண்டனை அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, தி.மு.க அரசின் தோல்விகளையும், பிரதமர் மோடியின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துச்செல்வோம்... தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக அரசு அமைக்கும் என்று குறிப்பிட்டார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, அவர்கள் மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஏன் இந்த திட்டத்தை கொண்டுவரவில்லை?... அவர்களே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அங்கமாக இருந்தனர்...
பாலு, ராசா ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர்... அப்போது எல்லாம் எய்ம்ஸ் குறித்து ஏன் அவர்கள் யாரும் யோசிக்கவில்லை? என்று அமித்ஷா கேள்வி எழுப்பினார்.
கீழடி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, தொன்மையான நாகரிகம் நாட்டில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டாலும் அது இந்தியா முழுவதற்கும் பெருமையான விஷயம்...
ஆனால், உலகம் இதை ஏற்றுக்கொள்வது சர்வதேச தரமான ஆதாரங்களின் அடிப்படையில் தான் என்று பதிலளித்தார்.
கச்சத்தீவு விவகாரத்தில், சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் என்னென்ன செய்ய முடியும் என்பதைச் செய்வது தான் தங்களது நோக்கம் என்று அமித்ஷா குறிப்பிட்டார்.
முருக பக்தர்கள் மாநாட்டில், பெரியாரையும், அண்ணாவையும் விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, இது பா.ஜ.க நிகழ்ச்சி அல்ல... அது இந்து முன்னணி நிகழ்ச்சி என்று தெரிவித்தார்.
சமக்ர சிக்ஷா திட்ட நிதி மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, தமிழ்நாடு அரசு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது... ஆனால் அதை நடைமுறைப்படுத்தவில்லை...
இது கல்வி அமைச்சகத்துக்கு உட்பட்ட விவகாரம்... மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதை கவனித்து வருவதாக குறிப்பிட்டார்.