Tvk Vijay | Tvk Meeting | வரப்போகும் மாற்றங்கள்.. பவரை கையில் எடுக்கும் விஜய்
விஜய் தலைமையில் 'தவெக சிறப்பு பொதுக்குழு'
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று கூடுகிறது.
இதில், மத்திய மாநில அரசுகளின் மக்களை பாதிக்கும் திட்டங்களை எதிர்ப்பது, தேர்தலை சந்திப்பதற்கான இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் வழங்குவது உட்பட 10க்கும் மேற்பட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், தவெகவின் சிறப்பு பொதுக்குழு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.
முக்கியமாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு கட்சி ரீதியிலான கட்டமைப்பை மேம்படுத்துவது, தேர்தலை சந்திப்பது குறித்தும் இந்த பொதுக்குழுவில் முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் பொதுக்குழு கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில நிர்வாகிகள், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 15 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பு கடிதத்தையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் கலந்து கொள்ள கட்சியின் பொதுச் செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நிகழ்ச்சியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. பின்னர் கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தியதற்கு பின்பு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் உரையாற்றுகின்றனர். நன்றியுரைக்கு முன்னர் தவெக தலைவர் விஜய் விழா உரையாற்ற உள்ளார்.