முதல்வர், துணை முதல்வர் நலனுக்காக மெக்காவில் பிரார்த்தனை செய்த நாகூர் நஜிமுதீன்
மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்ட தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் நாகூர் நஜிமுதீன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் நலனுக்காக பிரார்த்தனை செய்துள்ளார். இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஹஜ் புனித யாத்திரை கருதப்படுகிறது. ஒவ்வொரு இஸ்லாமிய மக்களும் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் கடமையாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் நாகூர் நஜிமுதீன், அவரது தந்தை நாகூர் ஹாஜா மைதீன், ஹாஜி ஹக்கீம் ஹஜ்ரத், இறையருள் அய்யூப், செய்யது அஹமது ஆகியோர் ரமலான் மாதத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டனர். அங்கு நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் தமிழக அரசின் மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் நாகூர் நஜிமுதீன் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்றும், மக்களுக்கு தொடர்ந்து இந்த ஆட்சி நன்மை செய்ய வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டிக் கொண்டார்.