பவுன் ரூ.80 ஆயிரம் எட்டிய நிலையில் தங்கம் குறித்து ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பு
ரிசர்வ் வங்கியின் தங்கம் கையிருப்பு ரூ.7.25 லட்சம் கோடி
தங்கம் கையிருப்பு ஏழேகால் லட்சம் கோடி ரூபாயை எட்டியதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு நாணய கையிருப்பு கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி நிலவரப்படி 3.51 பில்லியன் அமெரிக்க டாலர் உயர்ந்து, மொத்தம் 694.23 பில்லியன் டாலராக, அதாவது சுமார் 57 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தங்கமே முக்கிய பங்காற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஜுன் மாத நிலவரப்படி 840.76 டன்னாக இருந்த தங்கம் கையிருப்பு 2025 ஜுன் 27ம் தேதி நிலவரப்படி 879.98 டன்னாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் சுமார் 39 டன் தங்கம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. தங்கத்தில் அதிக முதலீடு செய்வதற்கு ரிசர்வ் வங்கி முன்னுரிமை அளித்து வருகிறது. தங்கம் பாதுகாப்பான முதலீடாக மட்டுமல்லாமல் நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பை வலுப்படுத்தும் வல்லமையையும் கொண்டது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவின் மொத்த வெளிநாட்டு நாணய கையிருப்பில் தங்கத்தின் பங்கு சுமார் 12 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. இதில், அந்தந்த நாட்டு மக்கள் கையில் வைத்துள்ள தங்கத்தின் அளவு சேராது என்பது குறிப்பிடத்தக்கது.