சர்வதேச புத்தகப் போட்டி - தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் '1801' புத்தகம் தேர்வு

மலேசியாவில் நடைபெற்ற அனைத்துலக புத்தகப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய புத்தகம் முதல் பரிசை வென்றுள்ளது.

Update: 2018-12-23 05:54 GMT
மலேசியாவில் நடைபெற்ற அனைத்துலக புத்தகப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய புத்தகம் முதல் பரிசை வென்றுள்ளது. 

மலேசியா டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா நில நிதி கூட்டுறவு சங்கத்தின் சார்பில் சோமா மொழி இலக்கிய அறவாரியம் நடத்திய அனைத்துலகத் 
தமிழ்ப் புத்தகப் போட்டியில், இந்த ஆண்டு இந்தியா, இலங்கை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 175 நூல்கள் பங்கேற்றன.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய '1801' நூல் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. இந்நூல் இந்திய சுதந்திரத்திற்காக தமிழகத்தில் எழுந்த முதல் போராட்டத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ள வடகரை கிராமத்தில் பிறந்தவர் மு.ராஜேந்திரன். இவர் முதுகலை ஆங்கில இலக்கியமும் சட்டமும் படித்தவர். ஐ.ஏ.எஸ். தேர்விற்காக வரலாற்றை ஒரு பாடமாக எடுத்து படித்தவர். பல வரலாற்று நாவல்களை எழுதியிருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராய் இருந்தபோது, ஆயிரம் ஆண்டுகாலப் பழமையான கோவில்களில் உள்ள கல்வெட்டுகளைத் தொல்லியல்துறை உதவியுடன் படியெடுத்தவர். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரியாக பொறுப்பு வகித்திருக்கும் இவர், தற்போது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்