வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் - 2019 ஆஸ்கார் போட்டிக்கு தேர்வான இந்திய படம்

வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் என்ற அசாம் திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்காரில் போட்டியிடும் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

Update: 2018-09-22 09:01 GMT
தரமான படங்களை தயாரிப்பதில் இந்திய சினிமா எப்போதும் தவறியதில்லை.அப்படி ரிமா தாஸ் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்.அசாமில் உள்ள கிராமத்தில் இருக்கும் சிறுமி தனது ஏழ்மையிலும் எலக்ட்ரிக் கிட்டார் வாங்க வேண்டும் என்ற கனவினை எட்டிய கதையை மிகவும் எளிமையாக கூறியிருப்பார்.இந்த படம் அனைவரையும் கவர்ந்திருந்ததோடு கடந்த ஆண்டுக்கான சிறந்த படம் என்ற தேசிய விருதையும் பெற்றிருந்தது.

2019 ஆஸ்காரில் “சிறந்த வெளிநாட்டு படம” பிரிவில் போட்டியிட ஒரு இந்திய படத்தினை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது..கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களான ஆலியா பட் நடித்த ரசி , தீபிகா படுகோன் நடிப்பில் சக்கைப்போடு போட்ட பத்மாவதி , கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட மகாநதி போன்ற படங்கள் இந்த ஒரு இடத்திற்காக போட்டி போட்டன. இந்நிலையில் இன்று காலை பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா ரிமா தாஸின் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படத்தை இந்தியாவின் சார்பாக ஆஸ்காருக்கு அனுப்பப்படும் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளது

இந்த மகிழ்ச்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் படத்தின் இயக்குனர் ரிமா தாஸ்.இந்த திரைப்படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வானது தன்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளதாகவும், அளவுகடந்த ஆனந்தத்தோடும் . பெருமையோடும் இந்த செய்தியை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வானதை தொடர்ந்து திரைப்பட பிரபலங்களும் , இந்திய சினிமா ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர். இது ஆஸ்கார் போட்டிக்கு தேர்வாகியுள்ள முதல் அஸ்ஸாமீஸ் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் நிச்சயம் ஆஸ்காரில் விருதை கைப்பற்றும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்