விளையாட்டு திருவிழா - 31.10.2018 :இதே நாளில் 183 ரன்கள் விளாசி சாதனை படைத்த தோனி

விளையாட்டு திருவிழா - 31.10.2018 2005 ஆம் ஆண்டு இதே நாள் தோனி தாம் யார் என்று உலகத்திற்கு நிரூபித்தார்.
விளையாட்டு திருவிழா - 31.10.2018 :இதே நாளில் 183 ரன்கள் விளாசி சாதனை படைத்த தோனி
x
இதே நாளில் 183 ரன்கள் விளாசி சாதனை படைத்த தோனி :

2005 ஆம் ஆண்டு இதே நாள் தோனி தாம் யார் என்று உலகத்திற்கு நிரூபித்தார். தோனி அதிரடியாக விளையாடக் கூடியவர் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், அதிரடி மன்னன் என்ற பட்டத்தை அவருக்கு பெற்று தந்தது இன்று தான். ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 299 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி எதிர்கொண்டது.  சச்சின் ஆட்டத்தின் முதல் ஓவரிலே ஆட்டமிழக்க, மூன்றாவது வீரராக களமிறங்கினார் தோனி.

ஆடுகளத்தில் சரவெடியை கொளுத்திய தோனி, ரசிகர்களுக்கு தனது இமாலய சிக்சர்கள் மூலம் வான வேடிக்கை காட்டினார் தோனி.145 பந்துகளை எதிர்கொண்ட அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் விளாசினார். இதில் 15 பவுண்டரிகளும், 10 சிக்சர்களும் அடங்கும். 10 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அன்றைய போட்டியில் தோனி படைத்தார்.

ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் விளாசிய விக்கெட் கீப்பர் என்ற மற்றொரு சாதனையும் தோனிக்கு சொந்தமானது. தோனியில் அதிரடியால் இந்திய அணி 46 புள்ளி 1 ஓவரிலே வெற்றி இலக்கை எட்டியது.  இலக்கு கொஞ்சம் அதிகம் இருந்திருந்தால், அப்போதே தோனி இரட்டை சதம் விளாசி இருப்பார். இது போன்ற ஆட்டத்தை தங்கள் வாழ்நாளில் பார்த்து இல்லை என்று ரசிகர்கள் வியந்தனர். அன்று முதல் தோனி வரை, இந்திய அணிக்கு தூணாகவே தோனி விளங்குகிறார். 

இந்தியா Vs மே.இ.தீவுகள் 5வது ஒருநாள் : தொடரை கைப்பற்ற இந்தியா தீவிரம் :

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை திருவனந்தப்புரத்தில் நடைபெறுகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை உள்ளது. தொடரை கைப்பற்ற வேண்டிய உத்வேகத்துடன் உள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடைசி ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என தெரிகிறது. 4வது ஒருநாள் போட்டியில் தோனி அதிரடியாக ஆடினாலும், பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை. இதனால் நாளைய போட்டியில் தோனி, முன்வரிசையில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

கடைசி போட்டியை வென்று தொடரை சமனில் முடிக்க வேண்டிய நெருக்கடியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் உள்ளனர். இதனால் சுனில் அம்பிரிஸ் போன்ற வீரர்களுக்கு நாளைய போட்டியில் வாய்ப்பளிக்கப்படலாம் என தெரிகிறது. கடந்த 3 ஆண்டுகளாக ஒருநாள் தொடரில் சொந்த மண்ணில் இந்திய அணி ஒரு போட்டிக்கு மேல் தோற்றது இல்லை. அந்த சாதனை தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

குல்ஃபி ஐஸ் விற்கும் அர்ஜூனா விருது வென்ற குத்துச்சண்டை வீரர்:

ஹரியானா மாநிலம் பிவானி நகரில் பிறந்தவர் குத்துச்சண்டை வீரர் தினேஷ் குமார். 30 வயதான இவர் இந்தியாவுக்காக 17 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருதையும் தினேஷ் குமார் வென்றுள்ளார். இவ்வளவு பெருமைகளை பெற்ற தினேஷ் குமார், இன்றோ தனது குடும்பத்தை காப்பாற்ற குல்ஃபி ஐஸ் விற்று வருகிறார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு தினேஷ் குமார், விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்தார். பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு பிறகு தான், இன்று தினேஷ் குமாரால் நிற்கவே முடிகிறது. ஆனால், இதற்கான சிகிச்சைக்கு அரசு ஒரு பைசாவை கூட உதவித் தொகை அளிக்கவில்லை என்று கூறுகிறார் தினேஷ் குமார். சிகிச்சைக்காக பல லட்சம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பித் தர முடியாமல் குல்ஃபி ஐஸ் விற்க வந்துவிட்டதாகவும் தனது வேதனையை பகிர்கிறார் தினேஷ்.

உரிய சிகிச்சையும் உதவியும் கிடைத்திருந்தால், இந்நேரம் குத்துச்சண்டை வீரராகவே தனது வாழ்க்கையை தினேஷ் குமார் தொடர்ந்திருப்பார். நாட்டிற்காக வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி விளையாடி பதக்கம் வெல்லும் பல வீர்ர்கள், அரசின் உதவிக் கிடைக்காமல் வாழ்க்கையில் போராடி வருகின்றனர். இதற்கு தினேஷ் குமாரும் விதிவிலக்கு அல்ல..


Next Story

மேலும் செய்திகள்