விளையாட்டு திருவிழா 04.09.2018 - ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து வீரர் குக்
பதிவு : செப்டம்பர் 04, 2018, 08:21 PM
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு இலக்கணம் அலெஸ்டர் குக்.
அலெஸ்டர் குக் இங்கிலாந்து கண்டு எடுத்த சொக்கத்தங்கம். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு இலக்கணம் அலெஸ்டர் குக். 2006ஆம் ஆண்டு 21 வயதான அலெஸ்டர் குக், இந்தியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் களமிறங்கினார். இந்திய மண்ணில் சுழற்பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டு முதல் போட்டியிலேயே சதம் கண்டார் குக்.

அலெஸ்டர் குக்கின் வருகைக்கு பிறகு இங்கிலாந்துக்கு புத்துயிர் கிடைத்தது. தொடர்ந்து ரன்களை குவித்த வந்த அவர், பல்வேறு சாதனைகளையும் முறியடித்தார். 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி ஆஷஸ் கோப்பை வென்றது. 766 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார் குக். இதனால் அவருக்கு கேப்டன் பதவி தேடி வந்தது. 

இங்கிலாந்துக்கு கேப்டனாக பொறுப்பேற்ற குக், 2013 மற்றும் 2015ஆம் ஆண்டு பாரம்பரிய ஆஷஸ் கோப்பையை வென்றார். தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த குக், 2015ஆம் ஆண்டில் ஆஷஸ் தோல்வி,  இந்தியாவுக்கு எதிராக படுதோல்வி அடைந்ததன் மூலம் கேப்டன் பதவியை இழந்தார். தனது 33வது வயதில் 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குக், 32 சதங்களுடன் 12 ஆயிரத்து 254 ரன்கள் குவித்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்த இங்கிலாந்து வீரர், அதிக சதம் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் குக் படைத்துள்ளார்.  சச்சினின் அதிக டெஸ்ட் ரன் சாதனையை குக் உடைப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

வேக்போர்ட் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி:

உலக Wake Board அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானில் நடைபெற்றது. அலைச்சறுக்கு தெரியும்.. அது என்ன Wake Board அலைச்சறுக்கு. படகில் கயிறு கட்டி அலைச்சறுக்கு செய்து பின்னர் அந்தரத்தில் பல்டி அடிப்பது தான் WAKEBOARD அலைச்சறுக்கு போட்டி. ஜப்பானின் மியோஷி கடற்கரை பகுதியில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டி ஆடவர், மகளிர் என இருப் பிரிவுகளாக நடந்தது. வீரர், வீராங்கனைகள் WAKE BOARD அலைச்சறுக்கு சாசகம் மேற்கொண்டு பார்வையாளர்களை அசர வைத்தனர். ஆடவர் பிரிவில் முதல் மூன்று இடங்களையும் ஆஸ்திரேலிய வீரர்களே கைப்பற்றினர். 

ஃபிஃபா விருதுகள் பட்டியல் வெளியீடு : சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் ரொனால்டோ:

சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை FIFA வெளியிட்டுள்ளது. ரியல் மாட்ரிட் அணிக்கு தொடர்ந்து 3 சாம்பியன் கோப்பையை வென்று தந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ரொனால்டோ உலகக் கோப்பை தொடரில் 3 கோல் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான விருதை வென்ற மொட்ரிச்சின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கடந்த சீசனில் 44 கோல்கள் அடித்து லிவர்பூல் வீரரும், எகிப்து அணியின் நட்சத்திர வீரருமான முகமது சாலாவும் இடம்பெற்றுள்ளார்.

சிறந்த கோல் கீப்பருக்கான விருது பட்டியலில் பிரான்ஸ் வீரர் லோரிசும், பெல்ஜியம் வீரர் கொர்டியசும் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சிறந்த பயிற்சியாளருக்கான விருது பட்டியலில் பிரான்ஸ், குரோஷியா மற்றும் ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர்கள் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

21-வது தேசிய கார் பந்தயம்:

கோவையில் நடைபெற்ற 21-வது தேசிய அளவிலான கார் பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட் வேயில், 21-வது தேசிய அளவிலான  கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன பந்தயங்களின் இரண்டாவது சுற்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் சென்னை, கோவை, டெல்லி, மும்பை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வீர்ர்கள் பங்கேற்றனர். முதலாவதாக நடைபெற்ற நோவிஸ் கோப்பைக்கான போட்டியில் முதலாவது இடத்தை கொச்சின் வீரர் அஸ்வின் நாயர் வென்றார்.  

ரோஜர் பெடர‌ர் அதிர்ச்சி தோல்வி:

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். நியூயார்க் நகரில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மாக் மில்லனை எதிர்கொண்ட பெடரர் 6க்கு 3, 5க்கு 7, 6 க்கு7, 6க்கு 7 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினார்.


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.