தலிபான்கள் வசமானது ஆப்கானிஸ்தான் - அதிபர் அஷ்ரப் கனி வெளியேறினார்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள் போர் ஓய்ந்ததாக அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள் போர் ஓய்ந்ததாக அறிவித்துள்ளனர். நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி, தஜிகிஸ்தான் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2001 ஆம் ஆண்டு அல் கொய்தா தீவிரவாதிகளால் அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிலையில், அந்த அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை ஒப்படைக்க ஆப்கானிஸ்தான் மறுத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.அப்போது நாட்டில் அதிகாரத்திலிருந்த தலிபான்கள் விரட்டப்பட்டு, ஜனநாயக ஆட்சி முறை கொண்டுவரப்பட்டது.எனினும் மலை பிராந்தியங்கள், கிராமபுறங்களில் ஆதிக்கம் செலுத்திய தலிபான்கள் அங்கிருந்தவாறு தாக்குதலை தொடர்ந்தனர். போருக்கு மத்தியில் 2011 ஆம் ஆண்டு பின்லேடனை அமெரிக்க ராணுவம் கொன்ற நிலையில், 2013 ஆம் ஆண்டு தலிபான் தலைவர் முல்லா உமரும் உயிரிழந்தார். ஒருபுறம் தலிபான்களின் தாக்குதலை எதிர்க்கொண்ட அமெரிக்க ராணுவம், ஆப்கான் படைகளுக்கு பயிற்சியும் வழங்கி வந்தது. 2018 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதாக கூறி பேச்சுவார்த்தையை தொடங்கினார். 17 மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதியாக 2020 பிப்ரவரியில் இருதரப்பு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் அதிபரான ஜோ பைடன் 2021 செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் என அறிவித்தார்.ஜூன் மாதத்திலிருந்து 90 சதவீத அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், மறுபுறம் தலிபான் படைகள் ஆப்கானின் பெரும்பாலான நகரங்களை கைப்பற்ற தொடங்கினர். முக்கிய நகரங்களையும், அண்டை நாடுகளுடனான எல்லை பகுதிகளையும் கைப்பற்ற தொடங்கிய தலிபான்கள், கடந்த 10 நாட்களில் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்களின் தலைநகரங்களையும் கைப்பற்றினர்.இறுதியாக தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள், அதிபர் மாளிகையையும் தங்கள் வசப்படுத்தினர். அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக, அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய தலிபான்கள், முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி தலைமையில் இடைக்கால அரசை அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அதிபர் பதவியை ராஜினாமா செய்த அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவர் உஸ்பெகிஸ்தான் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானில் இருந்து தங்கள் படைகளை திரும்ப பெறும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 20 ஆண்டு கால போரில் காபூலை கைப்பற்றியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் போர் ஓய்ந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
Next Story

