மியான்மர் ராணுவத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஆயுதங்களை கையில் எடுக்கும் மக்கள்

மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக மக்கள் ஆயுதங்களை கூர்தீட்ட தொடங்கியிருக்கும் நிலையில், உள்நாட்டு போர் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மியான்மர் ராணுவத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஆயுதங்களை கையில் எடுக்கும் மக்கள்
x
மியான்மரில் கடந்த பிப்ரவரியில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து, ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்.ராணுவத்தின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் போராட தொடங்கிய மக்கள், ஆங் சான் சூகியை விடுதலை செய்யவும் வலியுறுத்தினர். போராட்டம் நடத்துபவர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு உள்பட கண்மூடித்தனமான தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ராணுவத்தால் 800-க்கும் அதிகமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். 4 மாதங்களை கடந்தும் மக்கள் போராட்டம் ஓயவில்லை. தற்போது பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களும் போராட்டக்களம் இறங்கியிருப்பது ராணுவத்திற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.ராணுவத்தின் அடக்குமுறையை காண முடியாது காவல்துறையை சேர்ந்தவர்களும் பதவி விலகி வருகிறார்கள்.  இந்நிலையில் ஜனநாயகத்தை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் ராணுவத்திற்கு எதிராக தேசிய ஒன்றிணைவு அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதில் இடம்பெற்றிருக்கும் அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களை பயங்கரவாதிகள் என ராணுவம் அறிவித்துள்ளது.இதற்கிடையே மக்களும் ராணுவத்திற்கு எதிராக ஆயுதங்களை கூர்தீட்டி வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.யங்கூனில் ராணுவத்திற்கு எதிரான பதிலடி துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. சின் மாநிலத்தில் மின்தாத் பாரம்பரிய வேட்டை ஆயுதங்களை கொண்டு எதிர் தாக்குதலை நடத்தி உள்ளனர். மேலும் வனப்பகுதிகளில் வெடிகுண்டுகளையும் தயாரிக்கவும், ஆயுத கையாளவும் இளைஞர்கள் பயிற்சியை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.   
இதுபோன்று காயா மாநிலத்தில் காரென்னி ஆயுதக் குழுக்கள் ராணுவத்திற்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகின்றன. அங்கு ராணுவமும் விமானப்படை மூலம் குண்டுகளை வீசுவதாகவும், இருதரப்பு சண்டையில் 80 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
மியான்மரில் புதிய ராணுவத்தை உருவாக்க போவதாக தேசிய ஒன்றிணைவு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகள் பேசியுள்ளன.மேலும், ராணுவத்திற்கு எதிராக போராடும் குழுக்கள் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பள்ளிகள், கல்லூரிகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளன.மியான்மரில் ராகினே மாநிலத்தில் மட்டும் ஆயுதக்குழுக்கள் காணப்பட்ட நிலையில், தற்போது பிற பிராந்தியங்களிலும் புதிய ஆயுதம் தாங்கிய குழுக்கள் எழ தொடங்கியிருக்கிறது என தகவல் வெளியாகியிருக்கிறது. மியான்மரில் தற்போது உள்நாட்டு போர் வெடிக்கும் மோசமான சூழல் நிலவுவதாக சர்வதேச தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்