தீவிரமாகும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலால் போர் மூளும் அபாயம் - சீறிப்பாயும் ராக்கெட் ஏவுகணைகள்

மத்திய கிழக்கில் இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் இடையே மோதல் மோசமாவதால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தீவிரமாகும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலால் போர் மூளும் அபாயம் - சீறிப்பாயும் ராக்கெட் ஏவுகணைகள்
x
கிழக்கு ஜெருசலமில் கடந்த மே 7-ம் தேதியன்று இஸ்ரேல் காவல்துறையினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் அல் அக்‌ஷா மசூதியில் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இஸ்ரேலில் உள்ள அரேபியர்களை யூதர்கள் தாக்கும் சம்பவங்களும், அவர்களுடைய உடைமைகளை சூறையாடும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. 
அரேபியர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. 

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலை நோக்கி இடைவிடாது ராக்கெட் ஏவுகணைகளை வீசிகிறது. இவை அனைத்தையும் நடுவானிலேயே இடைமறித்து அழித்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்.

இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பை மீறிச் செல்லும் ராக்கெட்கள், டெல் அவிவ் மற்றும் அதன் அண்டை நகரங்களை தாக்கியுள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் வீசும் ராக்கெட்கள் காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை தூள் தூளாக்கியுள்ளது. இந்த தாக்குதலில், காசா பகுதியில் 65 பாலஸ்தீனர்கள் உயிரிழந்து இருப்பதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் இஸ்ரேல் தரப்பில் 7 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது.

காசா, இஸ்ரேல் இடையே வானில் எந்நேரமும் சீறிபாயும் ராக்கெட் ஏவுகணைகளால் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. 

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தங்கள் பிராந்தியத்தில் இஸ்ரேல் வன்முறையை தடுத்து நிறுத்தும் என நம்புவதாகவும், பிராந்தியத்தை காக்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இஸ்ரேலை நெருங்கிய நட்பு நாடாக கொண்டிருக்கும் அமெரிக்கா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கண்டன அறிக்கையை வெளியிட அனுமதிக்கவில்லை. கிழக்கு ஜெருசேலம் உள்பட அரேபியர்கள் வசிக்கும் பகுதிகளில் இஸ்ரேலியர்களை குடியேற்றுதல், அரேபியர்களை வெளியேற்றுதல் மற்றும் கட்டிடங்களை தகர்க்கும் நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்த கூறும் அறிக்கையை வெளியிடுவதை அமெரிக்கா நிறுத்திவிட்டது. 

இதற்கிடையே காசாவில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து துருக்கி அதிபர் எர்டோகனும், ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசி வாயிலாக ஆலோசனையை மேற்கொண்டு உள்ளனர். இருதரப்பும் தாக்குதலை நிறுத்தி அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என ஐ.நா. மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்த வாரம் மட்டும் காசா பகுதியில் இருந்து ஆயிரத்து 500 ஏவுகணைகள் வீசப்பட்டு உள்ளதாக கூறும் இஸ்ரேல் ராணுவம், இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டதாக கூறியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய கமாண்டர்கள் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொதித்தெழுந்த ஹமாஸ் அமைப்பு தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் வேளையில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் பகுதியில் மீண்டும் போர் மேகம் சூழ்ந்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்