மருந்துகளுக்கான காப்புரிமை என்றால் என்ன? - இந்தியா கோரிக்கையும் அமெரிக்கா ஆதரவும்

கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய அமெரிக்கா ஆதரவளித்துள்ள நிலையில் இந்தியாவிற்கான பயன்கள் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
மருந்துகளுக்கான காப்புரிமை என்றால் என்ன? - இந்தியா கோரிக்கையும்  அமெரிக்கா ஆதரவும்
x
காப்புரிமை என்றால் என்ன?
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நாடுகள் தாங்கள் கண்டுபிடிக்கும் மருந்துகளுக்கு, 'தங்களுடைய கண்டுபிடிப்பு'என்பதற்கான உரிமையை பதிவு செய்வதுதான் காப்புரிமை என்பதாகும்.மருந்தை கண்டுபிடிக்கும் நிறுவனங்கள் தங்களுடைய மருந்துக்கான பார்முலா, செய்முறை உள்ளிட்ட ஆவணங்களை உலக வர்த்தக அமைப்பில் தாக்கல் செய்து பெறுகின்றன. 

காப்புரிமை பயன்கள் என்ன? 
 இவ்வாறு 20 ஆண்டுகளுக்கு அறிவுசார் காப்புரிமை பெறும் நிறுவனமோ, நாடோதான் குறிப்பிட்ட மருந்தினை தயாரிக்க முடியும். தேவையின் அடிப்படையில் மருந்துகளின் ஏகபோக வர்த்தகத்தில் ஈடுபடும் போது குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அதிகமான லாபம் கிடைக்கும்.மேலும் பெரும் செலவில் கண்டுபிடித்த மருந்துகளை உலகம் முழுவதும் சகட்டுமேனிக்கு காப்பியடிப்பதற்கு முற்றுபுள்ளி வைக்கப்படும். 
 
தற்போது காப்புரிமைக்கு எதிர்ப்பு என்ன?  
தற்போது உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு உயிரிழப்பு அதிகரிக்கும் சூழலில் கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை வழங்க கூடாது என பலதரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.  காப்புரிமை வழங்கலால் பணக்கார நாடுகளுக்கு மட்டுமே தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும், ஏழை மற்றும் வளரும் நாடுகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என்பது அவர்களுடைய கருத்தாக உள்ளது. 

நிறுவனங்களின் பார்வை என்ன?
காப்புரிமை கோரும் மேற்கத்திய மருந்து கண்டுபிடிப்பு நிறுவனங்கள், காப்புரிமையை ரத்து செய்வது கண்டுபிடிப்புகளுக்கான உத்வேகத்தை மட்டுப்படுத்தும் எனக் கூறுகின்றன.

மேலும், தரமற்ற மருந்து பொருட்களை தயாரிக்கும் நிலையும் ஏற்படும் என தெரிவிக்கின்றன.

இந்தியாவின் கோரிக்கை என்ன?
தடுப்பூசி மருந்துகளுக்கு காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமையில் இருந்து விலக்கு அளிக்குமாறு இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் கடந்த அக்டோபரில் உலக வர்த்தக அமைப்பிடம் கோரிக்கை விடுத்தன.
காப்புரிமையில் விலக்கு அளிக்கும்பட்சத்தில் உலகம் முழுவதும் மருந்து தயாரிக்கவும், குறைந்த விலையில் மருந்து கிடைக்கவும் வழிபிறக்கும் என 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
 
அமெரிக்காவில் எதிர்ப்பும், ஆதரவும் 
ஆனால் அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் கட்சியினரும், நிறுவனங்களும் காப்புரிமையை ரத்து செய்வதால் தாங்கள் பயனடையலாம் என்று பிற நாடுகள் நம்புகின்றன என எதிர்ப்பு தெரிவித்தன.இருப்பினும் நடுநிலையாளர்கள் தரப்பில் கொரோனாவில் இருந்து உலகை காப்பாற்ற காப்புரிமையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.  

ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை என்ன?
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உருமாறி பரவும் நிலையில் மனித குலத்தை காப்பாற்ற தடுப்பூசி செலுத்துதலில் கவனம் செலுத்துதல் முக்கியம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பைடன் நிர்வாகம் முடிவு 
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்வதை ஆதரிக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் சேவையில் தடுப்பூசிகளுக்கான காப்புரிமைகளை நீக்குவதை நாங்கள் ஆதரிக்கிறோம் என அமெரிக்கா கூறியுள்ளது.
 
இந்தியாவுக்கான பயன்கள் என்ன?
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பயனுள்ள தடுப்பூசிகள் தயாரிப்பை ஊக்குவிக்கவும், பற்றாக்குறையை சரிசெய்ய உதவும் போது இந்தியா உள்பட பல நாடுகளும் பயனடையும்.குறைந்த விலையில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதுடன், உயிரிழப்புக்களை மட்டுப்படுத்த  உதவியாக அமையும். இருப்பினும் அமெரிக்காவின் அறிவிப்பை போன்று உலக வர்த்தக அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் ஆதரவை நல்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. Next Story

மேலும் செய்திகள்