அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு குடியரசு தலைவர் வழங்கிய பிரமாண்ட விருந்து

குடியரசு தலைவர் மாளிகையில் பிரமாண்டமான விருந்து அளிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு குடியரசு தலைவர் வழங்கிய பிரமாண்ட விருந்து
x
டிரம்ப் வருகை காரணமாக, வண்ண விளக்குகளால் மின்னியது டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகை... 

அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மாளிகை வாசலுக்கே வந்து வரவேற்றனர்.முழு மரியாதையுடன் குடியரசு தலைவர் மாளிகைக்கு உள்ளே அழைத்து சென்றதும், இரு நாட்டு தேசிய கீதங்கள் வாசிக்கப்பட்டன. பின்னர் முக்கிய பிரமுகர்களை அதிபர் டிரம்பிற்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிமுகம் செய்து வைத்தார். 

குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுடன் கை குலுக்கி நலம் விசாரித்தார், டிரம்ப். கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களையும், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளையும் டிரம்ப் சந்தித்து உற்சாகமாக பேசினார். ஒரு சில அதிகாரிகள் டிரம்ப் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஏ.ஆர்.ரஹ்மானுடன் அதிபர் டிரம்ப் உற்சாகமாக உரையாடினார். பின்னர் பிரதமர் மோடி, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சமையல் கலைஞர் விகாஸ் கண்ணாவை சந்தித்து பேசினார். இந்திய பிரமுகர்களை அமெரிக்க அதிபர் சந்தித்து முடித்த பின்பு, மகள் இவாங்கா, மருமகன் ஜெரட் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு, டிரம்ப் அறிமுகம் செய்து வைத்தார். 

பின்னர், அனைவருக்கும் இந்திய, அமெரிக்க அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன. 90 சிறப்பு விருந்தினர்களுக்காக சைவம், அசைவம் என பார்த்து, பார்த்து உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. மீன், மட்டன் உள்ளிட்ட அசைவ உணவுகள் டிரம்பிற்கு பரிமாறப்பட்டன. விருந்தின் தொடக்கத்தில் பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், டிரம்பின் வருகை இருநாட்டு உறவை மேலும் வலுவடைய செய்துள்ளதாக கூறினார். 

பின்னர் பேசிய டிரம்ப், ஐ லவ் இந்தியா, மீண்டும் இந்தியாவுக்கு வருவோம் என கூறினார். விருந்து முடிந்த பிறகு, மாளிகை வாசல் வரை வந்து குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி இருவரும், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவியை வழியனுப்பி வைத்தனர். மூவர்ணத்தில் ஜொலித்த டெல்லியின் வண்ண மயமான சாலைகள் வழியே பாலம் விமான தளத்தை நோக்கி புறப்பட்டது, டிரம்ப் மற்றும் அவரது குழுவின் வாகனங்கள்...

2 நாள் ஓய்வெடுத்திருந்த ஏர் போர்ஸ் ஒன் விமானம் மீண்டும் அமெரிக்கா நோக்கி பறக்க ஆயத்தமாகி இருந்தது. டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா வந்த உடன் அங்கிருந்த உயர் அதிகாரிகள் அவர்களை வழியனுப்பி வைத்தனர். இருவரும் விமானத்தில் ஏறி கையசைத்தபடி தங்களது இந்திய பயணத்தை இனிதே நிறைவு செய்தனர். 








Next Story

மேலும் செய்திகள்