தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக்கொண்ட சிறுவர்கள்: மேலும் 4 பேர் மீட்பு, எஞ்சிய 5 பேரை மீட்கும் பணி தீவிரம்

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியிருந்த 4 சிறுவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக்கொண்ட சிறுவர்கள்: மேலும் 4 பேர் மீட்பு, எஞ்சிய 5 பேரை மீட்கும் பணி தீவிரம்
x
கடந்த மாதம் 23-ம் தேதி  தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை காண   12 சிறுவர்கள் மற்றும் கால்பந்து பயிற்சியாளர் ஆகியோர் சென்றனர். அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே அவர்கள் சிக்கிக்கொண்டனர்.  இதையடுத்து, 13 பேரையும் மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை களமிறங்கியது. 

சிறுவர்கள் குகைக்குள் சிக்கிய செய்தி காட்டுத் தீயாக பரவியது.  சிறுவர்கள் உயிருடன் மீட்க வேண்டி உலகின் பல்வேறு இடங்களில் பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் மீட்புப்பணிக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் நிலையில் உள்ளதாக பல்வேறு நாடுகள் அறிவித்தன. 

9 நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி மீட்பு குழுவினர், சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர். இந்நிலையில் சிறுவர்களை மீட்க களம் இறங்கிய மீட்பு படையினருக்கு  பருவநிலை பெரும் சவாலாக அமைந்தது. மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்  ஒருவர்  உயிரிழந்தார். திடீரென பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக  குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் சிறுவர்களை மீட்பதற்கு  கடும் சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது. இதனிடையே,  குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன.   

தொடர்மழை காரணமாக மீட்பு பணி இடையில் நிறுத்தப்பட்டு பின்னர் தொடர்ந்தது. மீட்புப்படையினரின் தொடர் முயற்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பலன் கிடைத்தது. 4 சிறுவர்களை கண்டுபிடித்த மீட்புபடையினர், அவர்களை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக மேலும் 4 சிறுவர்கள் திங்கள் கிழமை மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மீட்பு படைத்தலைவர், அவர்கள் நலமுடன் உள்ளதாக கூறினார்.  

8 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 5 பேரையும் விரைவில் மீட்போம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே மீட்பு பணிகளை தாய்லாந்​து பிரதமர் பிரயுத் சான் நேரில் ஆய்வு செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்