ஐகோர்ட் நீதிபதிக்கே இப்படி நடந்துச்சா? - சிதம்பரம் தீட்சிதர்கள் குறித்து கொதித்து சொன்ன வார்த்தைகள்
ஐகோர்ட் நீதிபதிக்கே இப்படி நடந்துச்சா? - சிதம்பரம் தீட்சிதர்கள் குறித்து கொதித்து சொன்ன வார்த்தைகள்
சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் குறித்து முன் வைக்கப்பட்ட சரமாரி கேள்விகள்... நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு ..
சிதம்பரம் தீட்சிதர்களைப் பார்த்து நீதிமன்றம் வைத்த கேள்விகளால் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள்
தீட்சிதர்கள் தங்களைக் கடவுளுக்கும் மேலானவர்கள் என நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள் என்றும் அவர்கள் ஆணவத்துடன் செயல்படுவது நல்லது அல்ல என நீதிபதி கூறிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
என்ன நடந்தது எதற்காக இந்த சுளீர் வார்த்தைகள்..
சிதம்பரம் கோவிலில் பணியாற்றி வந்த நட்ராஜ் தீட்சிதர் கனகசபையில் பக்தர்களை ஏறவிட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அவரை பொது தீட்சிதர்கள் குழு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து நட்ராஜ் தீட்சிதர் செய்த மேல் முறையீட்டை விசாரித்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி, பணி நீக்கத்தை ரத்து செய்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது தீட்சிதர் குழுவின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் பொது தீட்சிதர் குழுவின் முடிவில், தலையிட இந்து சமய அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் எனவே அந்த அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தான் நீதிபதி மேற் சொன்ன பரபரப்பு கருத்துக்களைத் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் தீட்சிதர்களால் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, மனகஷ்டங்களை போக்கத் தான் மக்கள் கோவில்களுக்கு வருகிறார்கள். ஆனால் அங்கு அவர்கள் அவமானத்திற்கு உள்ளாகிறார்கள் என்று வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும் சிதம்பரம் கோவிலுக்கு வருபவர்களை எல்லாம் சண்டைக்கு வருபவர்களாக தீட்சிதர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் என்றும், பக்தர்கள் வருகின்ற வரை தான் கோயில், அவர்கள் வரவிட்டால் அது பாழாகி விடும் என நீதிபதி தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவில்களில் காசு கொடுத்தால் தான் பூ கூட கிடைக்கும் இல்லாவிட்டால் விபூதி கூட கிடைக்காது எனவும் ஆதங்கம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கிற்கு இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்குமாறு வருகின்ற 21 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி தண்டபாணி.
ஏற்கனவே கடந்த ஆண்டு கனகசபை விவகாரத்தில் தீட்சிதர்கள் நடந்த கொண்ட விதம் பெரும் பேசு பொருளானது.
அதனைத் தொடர்ந்து கோவிலுக்குச் சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் காணவில்லை என இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்த வழக்கு எனத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சிதம்பரம் கோவிலின் தீட்சிதர்களின் நிர்வாகம் திண்டாடி வரும் நிலையில் நீதிபதி தெரிவித்த கருத்துக்களினால் மீண்டும் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது