"எவர்சில்வர் குடத்துக்கு இவ்ளோ மகிமையா?.. தொட்டால் ஒட்டும் பணமழை கொட்டும்" - கடைசியில் ட்விஸ்ட்

x

சதுரங்க வேட்டை பட பாணியில் இரிடியம் கலசம் என கூறி நூதன முறையில் பணம் சம்பாதிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்... இது குரித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

ரைஸ் புல்லிங் என்பது......மக்களின் மூடநம்பிக்கையை பயன்படுத்தி நடத்தப்படும் மோசடியாகும். கோவில்களில்

உள்ள கோபுரங்களின் மேல் உள்ள கலசங்களுக்கு நடத்தப்படும் பூஜையின் காரணமாக அதற்கு அதீத சக்தி இருப்பதாக மோசடி கும்பலால் நம்ப வைக்கப்படுகிறது.

பின்னர், கோவில்களிருந்து கடத்தி வரப்பட்டதாக கூறி போலியான கலசங்களை தயார் செய்து, அடுத்தகட்டமாக இதனை உண்மை என்று நம்பவைப்பதற்கு கலசம் அருகே காந்த துகள்களில் கலக்கப்பட்ட அரிசிகளை வைப்பார்கள்.

அப்போது அவை தானாக ஈர்க்கப்படும்.

இதனை ஏதும் அறியாத அப்பாவி மக்கள் இதை பார்க்கும் போது, எந்திரன் திரைப்படத்தில் ரோபட் ரஜினி மீது இரும்புகள் ஒட்டி சூலாயுதத்துடன் அம்மன் போல் காட்சியளிக்கும் ரஜினியை.. ஆத்தா... என வாய் பிளந்து கை கூப்பி வணங்குவது போல இதையும் கண்டு வியப்பின் அறியாமையில் மூழ்கி போவார்கள்.

இவ்வாறு, கலசத்தை நோக்கி அரிசி நகர்வதை சுட்டிக்காட்டி, இந்த கலசத்தை வைத்துக்கொண்டால் தங்களை நோக்கி பணமும், செல்வமும் வந்து சேரும் என ஆசையை தூண்டி மோசடி கும்பல் பணம் சம்பாதித்து வந்தது.. இதை சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் இயக்குநர் ஹச். வினோத் கச்சிதமாக தெளிவுபடுத்திருப்பார்..

இந்நிலையில், இதே பாணியில் கழுத்தறுக்கப்பட்ட எவர்சில்வர் குடத்தை விசேஷ சக்தி வாயந்த இரிடிய கலசம் என கூறி ஏமாற்றி இருவர் மோசடிக்கு முயன்று போலீசில் சிக்கியுள்ளனர்...

திருவண்ணாமலை மாவட்டம் அளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காண்டிபன். இவர் நல்லவன் பாளையத்தை சேர்ந்த குணசேகரன் என்பவருடன், வந்தவாசி அருகேயுள்ள ஆரியத்தூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கிய நிலையில், சதுரங்க வேட்டை பட பாணியில் தங்களிடம் இரிடிய கலசம் இருப்பதாக கூறி விளம்பரம் செய்துள்ளனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் நாப்பாளையத்தை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடனால் சிக்கி தவித்த நிலையில், இதை நம்பி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்த அவர், இருவரிடமும் கலசத்தை வாங்க 20 ஆயிரம் ரூபாய் பணத்தை முன்பணமாக கொடுத்திருக்கிறார்.

இறுதியில், அந்த கலசத்தை வாங்கிய சங்கர் கணேஷிற்கு, அதன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து காவல்நிலையத்தில் அவர் புகார் அளிக்க, அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

அதன் பிறகு விற்கப்பட்ட கலசத்தை போலீசார் ஆய்வு செய்தபோது, எவர்சில்வர் குடத்தின் கழுத்து பகுதியை மட்டும் வெட்டி எடுத்து, அதனை கலசம் போல அமைத்து ஏமாற்றி விற்றது விசாரணையில் அம்பலமானது. மேலும், அதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய் எனக் கூறி, மோசடி கும்பல் பணத்தை கறக்க முயன்றதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காண்டிபன் மற்றும் குணசேகரன் ஆகிய இருவரையும் செய்தனர். அவர்களிடம் இருந்து எவர் சில்வர் குடம் மற்றும் இருபதாயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இரிடியம் மோசடியில் ஈடுபட்ட பல நபர்களை காவல் துறையினர் கைது செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், ஆசை கண்களை மறைக்கும் போது ஆராயும் திறன் குறைந்து இழப்புகளை சந்திக்க வேண்டிய உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்