சென்னையை அதிரவைத்த கண்டெய்னர் திருட்டு... மாயமான ரூ.35 கோடி - அதிர்ச்சி தகவல்

x

சென்னை மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் CITPL நிறுவனம் சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் பணியை செய்து வருகிறது.

இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு சீனாவில் இருந்து 35 கோடி ரூபாய் மதிப்பிலான எலெக்ட்ரானிக் பொருட்கள் கண்டய்னர் மூலம் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கண்டெய்னர் கடந்த செப்டம்பர் 7ம் தேதி சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த நிலையில், பெங்களூரு நிறுவனம் கண்டெய்னரை ஏற்றிவர கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி டிரைலர் லாரியை அனுப்பியது. டிரைலர் லாரி ஓட்டுநர் , CITPL நிறுவனத்தின் யார்டுக்கு சென்று பார்த்தபோது, கண்டெய்னர் மாயமாகியிருந்தது. புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட துறைமுகப் போலீசார், வேறொரு டிரைலர் லாரி மூலம், கண்டெய்னர் திருடப்பட்டது தெரியவந்தது. மேலும், CITPL நிறுவன ஊழியர் இளவரசன் திருட்டு கும்பலுடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கண்டெய்னரை மீட்ட போலீசார், ஓட்டுநர்கள், தரகர்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த இளவரசன், இடைத்தரகர் சங்கரன் உள்ளிட்ட 3 பேரை தேடி வந்தனர். இந்நிலையில், சங்கரனையும், இளவரசனையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்