பெயிண்டரை கடத்திய ஆட்டோ ஓட்டுநர்..விற்ற வாகனத்தை திருப்பி தரக் கோரிக்கை
விற்பனை செய்த இருசக்கர வாகனத்தை திருப்பி தரக் கோரி பெயிண்டரை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விற்பனை செய்த இருசக்கர வாகனத்தை திருப்பி தரக் கோரி பெயிண்டரை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாங்காடு பரணி புதூரைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வெங்கடேசன். இவர் ஆறு மாதங்களுக்கு முன்பு பைனான்ஸ் நிறுவனம் மூலம் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கினார்.ஆனால் மாதாந்திர கடன் தொகையை சரிவர செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் அந்த வாகனத்தை தன் நண்பரான பெயிண்டர் ராஜா மூலமாக முருகன் என்பவரிடம் விற்றுள்ளார். ஆனால் மாதாந்திர தவணையும் செலுத்தாமல், வாகனத்தையும் திருப்பித் தராமல் இருந்ததால் பைனான்ஸ் நிறுவனம் வெங்கடேசனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.இதையடுத்து வெங்கடேசன், தன் நண்பர் ராஜாவை தொடர்பு கொண்டு இருசக்கர வாகனத்தை கேட்டுள்ளார். அப்போது அவர்கள் முறையாக பதிலளிக்க மறுக்கவே, தன் நண்பர்களுடன் சேர்ந்து ராஜாவை ஆட்டோவில் ஏற்றிச் சென்று தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வெங்கடேசன், ஜெயராஜ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும் இருசக்கர வாகனத்தை வாங்கிய முருகனையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story