தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் - வரும் 12ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12-ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் - வரும் 12ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
x
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12-ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவ கல்லூரிகளில்  5 ஆயிரத்து 125 இடங்கள் உள்ளன.கடந்த ஆண்டு, நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து, மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டமைக்கப்பட்டன. இந்த 11 மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க சமீபத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது. இந்நிலையில், புதிய மருத்துவக் கல்லூரிகளை வருகிற 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி தொடங்கி வைக்கிறார். மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில்,  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் காணொலி காட்சி மூலம் பங்கேற்கின்றனர். முன்னதாக, விருதுநகரில் நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நேரடியாக கலந்துகொள்ள இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக ஆயிரத்து 650 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் கிடைக்கவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்